மகாரஷ்டிராவில் இன்று முதல் பாலிதீன் பைகளுக்கு தடை- மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்

மகாரஷ்டிராவில் இன்று முதல் பாலிதீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களின் பட்டியலில் ‘‘பாலி தீன் பை’’ முதல் இடத்தில் இருக்கிறது.

‘‘கேரி பேக்’’ என்று அழைக்கப்படும் பாலிதீன் பைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. பாலிதீன் பைகளை பயன்படுத்திய பிறகு அவை குப்பையில் வீசி எறியப்படுகின்றன.

மண்ணோடு மண்ணாக மக்காத இந்த பாலிதீன் பைகள் சுற்றுச் சூழலை பாதிக்கின்றன. தாவரங்களின் இனப்பெருக்கம் தடைபடுகிறது. அனைத்து வகை உயிரிணங்களுக்கும் இது எமனாக மாறியுள்ளது.

சுட, சுட பாலிதீன் பைகளில் கட்டி கொடுக்கப்படும் உணவுப் பொருட்களில் ரசாயண மாற்றங்கள் ஏற்பட்டு நோய்கள் உருவாகும் அச்சுறுத்தல் நிலவுகிறது. எனவே பிளாஸ்டிக், பாலிதீன்களை ஒழிக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் மகாரஷ்டிராவில் இன்று (சனிக்கிழமை) முதல் பாலிதீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் கடைக்காரர்களும், பொது மக்களும் பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாலின்தீன் பைகளை பயன்படுத்துவதை தடுக்க அதிகாரிகள் ஏராளமான குழுக்களை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் மார்க்கெட்டுகள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கடைகள், நடைபாதை கடைகள், கடற்கரை போன்ற இடங்களை கண்காணிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள போதிலும், இன்றும், நாளையும் பாலிதீன் பைகளை எடுத்துச் செல்பவர்களிடம் அறிவுரை வழங்கப்படும். திங்கட்கிழமை முதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கும்.

முதல் தடவை பிடிபடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் இரண்டாவது தடவை பிடிபடுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது தடவை பிடிபட்டால் ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் 3 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மும்பை வியாபாரிகள் பாலிதீன் தடைக்கு மேலும் அவகாசம் தர வேண்டும் என்று கேட்டனர். ஆனால் மராட்டிய மாநில அரசு அதை ஏற்க மறுத்து விட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!