தமிழகத்தில் ஜாதி கலவரம் வெடிக்கும்: எச்சரித்த பிரமுகர்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு பின்னர் வேளாளர் சாதிப் பெயர் கொண்ட சமுதாயங்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது என்றும் விரைவில் ஜாதி கலவரம் வெடிக்கும் முன்பே உடனடி தீர்வு காண வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழு சமுதாயங்களை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயர் கொண்டு அழைப்பதற்கு முதலமைச்சர் பரிந்துரை செய்துள்ளார். இந்த அறிவிப்பு மூலம் தமிழகத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தொன்று தொட்டு வேளாளர் பெயர் கொண்ட மற்ற சமுதாயங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில் அனைத்து தரப்பினரையும் தமிழக முதலமைச்சர் அழைத்துப் பேசாமல், தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சரை நேரில் சந்திக்க நேரம் கேட்டு கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி வேளாளர் சமுதாய மக்கள் கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் முதலமைச்சர் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேளாளர்கள் நடத்தும் போராட்டமானது உணர்வுப் பூர்வமானது.

தமிழகமெங்கும் உள்ள வேளாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்துக் செல்கிறது. அப்படி நடத்தும் போராட்டங்களில் காவல்துறையைக் கொண்டு அதிகார அத்துமீறல்களையும் தமிழக அரசு நடத்தி வருகிறது.

வேளாளர்களின் போராட்டம் அனைத்து பகுதிகளிலும் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு தரப்பினர்களுக்கும் இடையே மிகப்பெரிய சாதி கலவரம் வெடிக்க வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!