படைக்குறைப்பு என்பது பொய் – 13 ஆயிரம் பேரைப் புதிதாக சேர்க்கிறது சிறிலங்கா இராணுவம்

சிறிலங்கா இராணுவத்தில் ஆட்குறைப்புச் செய்யப்படவுள்ளதாகவும், வடக்கு, கிழக்கில் பல முகாம்கள் விலக்கப்படவுள்ளதாகவும், வெளியான செய்திகளை நிராகரித்துள்ள சிறிலங்கா இராணுவம், இந்த ஆண்டில், சுமார் 13,193 படையினர் ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ‘வடக்கு கிழக்கில் இருந்து சிறிலங்கா இராணுவத்தின் பல பிரிவுகள் விலக்கிக் கொள்ளும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு வெளியான செய்திகள் தவறாகும்.

பொதுமக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கும் அதிருப்தி அரசியல் குழுக்களின் செயற்பாடே இது.

வடக்கு கிழக்கில், எந்தவொரு இராணுவ முகாமையும் மூடாமல், இணைப்பு செயல்முறைகளை தொடர்ந்து வருகிறது.

போருக்குத் தயார் நிலையில் இருப்பதையும், எல்லா நேரத்துக்கும் உகந்த மூலோபாய மற்றும் நடவடிக்கை செயற்பாட்டு மட்டத்தை குறைய விடாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும் இந்த இணைப்பு செயல்முறை முன்னெடுக்கப்படுகிறது.

உண்மை என்னவெனில் சிவில் சமூகத்தில் உள்ள பலருக்கு, இணைப்பு, போர்த்திறன் போன்ற சில இராணுவ ரீதியான மொழிப் பிரயோகங்களின் அர்த்தம் புரிவதில்லை.

சிறிலங்கா இராணுவம் தற்போது, ஆண்டு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

இந்த ஆண்டில், 213 அதிகாரிகள் மற்றும் 8631 ஏனைய தரங்களைச் சேர்ந்தவர்களை நிரந்தரப் படைப்பிரிவுக்கும், 97 அதிகாரிகள் மற்றும் 4252 படையினரை தொண்டர் படைப்பிரிவுக்கும் சேர்த்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.” என்றும் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!