நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை: பெசில் தெரிவிப்பு!

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, 2021 வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பதுளை ஊவா பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில், நேற்று இடம்பெற்ற ‘கிராமத்துடன் வேலைத்திட்டக் கலந்துரையாடலில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, மாதமொன்றுக்கு 100 கோடி ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கிராமப்புற தேவைகளுக்காக, இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அனைத்து கிராம சேவகர் பிரிவுகளுக்கும் முன்பள்ளி மற்றும் மகப்பேறு சிகிச்சை நிலையம் என்பவற்றை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், நவீன உலகிற்கு பொருந்தும் வகையில் கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தி, கிராமப்புற பாடசாலைகளின் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் புதிய சந்தை வாய்ப்புகளை அடையாளங் கண்டு, திறமையான தொழிலாளர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்குவதாகவும், இதன் ஊடாக அந்நிய செலாவணியை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், பெசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நன்கொடைகள் மற்றும் கடன்களை வழங்கும் பல நாடுகள், கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு நன்கொடைகள் நாட்டுக்கு கிடைப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அரசாங்கத்தின் கடன் பெறும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஸ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!