மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிராகரித்த விவசாய சங்கங்கள்!

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, பஞ்சாப், அரியானா மாநில விவசாய அமைப்புகள், டெல்லி எல்லையில் 26 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய அரசுடன் 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன. வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது. ஆனால், அந்த சட்டங்களை ரத்து செய்தே தீர வேண்டும் என்று விவசாய அமைப்புகள் வலியுறுத்துவதால், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. கடந்த 9ந்தேதி, 6வது சுற்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அது திடீரென ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே, அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்து, 40 விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. மத்திய வேளாண் அமைச்சக இணை செயலாளர் விவேக் அகர்வால், அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

வேளாண் சட்டங்களில் 7 அம்சங்களில் திருத்தம் செய்வது குறித்து மத்திய அரசின் திட்டத்தை அனுப்பி வைத்திருந்தோம். பிரச்சினைக்கு உரிய தீர்வு காண மத்திய அரசு திறந்த மனதுடன் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. எனவே, அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்த தங்களுக்கு வசதியான தேதியை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆனால், மத்திய அரசின் கடிதத்தை விவசாய சங்கங்கள் நிராகரித்து விட்டன. இதுகுறித்து அபிமன்யு கோஹர் கூறியதாவது:–

மத்திய அரசு கடிதத்தில் புதிதாக எதுவும் இல்லை. வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யும் யோசனையை ஏற்கனவே நாங்கள் நிராகரித்து விட்டோம். அவர்களுக்கு எங்கள் கோரிக்கை தெரியாதா? சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.

திவாபா கிசான் கமிட்டி பொதுச்செயலாளர் அமர்ஜீத்சிங் ரர்ரா கூறுகையில், ‘‘மத்திய அரசுடன் பேச விவசாயிகள் எப்போதும் தயாராக உள்ளனர். ஆனால், மத்திய அரசு உறுதியான தீர்வுடன் வர வேண்டும். சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று திரும்ப திரும்ப சொல்லி வருகிறோம்’’ என்றார்.

அம்பேத்கர் சங்கர்ஷ் மோர்ச்சாவின் அரியானா மாநில தலைவர் ராம்சிங், ‘‘அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி செவ்வாய்க்கிழமை (இன்று) முடிவு செய்வோம். ஆனால், சட்டங்கள் ரத்து செய்யப்படும்வரை இங்கிருந்து நகர மாட்டோம்’’ என்றார்.

இதற்கிடையே, விவசாயிகள் தாங்கள் போராட்டம் நடத்தும் இடங்களில், தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அதன்படி, ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு நாள் என தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருக்கும். முதலில், சிங்கு எல்லையில், 11 பேர் கொண்ட குழு, தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கியது.

இதற்கிடையே, பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் டெல்லி சிங்கு எல்லையில் ரத்த தான முகாமை தொடங்கியது. போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் பலர், வரிசையில் நின்று தங்கள் பெயர்களை பதிவு செய்தனர்.

ஒரே நாளில் 190 விவசாயிகள் ரத்த தானம் செய்தனர். எனவே, ரத்த தான முகாமை மேலும் சில நாட்கள் நடத்த தொண்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!