இம்முறை கிறிஸ்மஸ் ஆடம்பரத்தை தவிர்த்து இல்லாதோருக்கு கொடுங்கள்!

ஆடம்பரங்களை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நத்தார் விழாவினை கொண்டாடுவோம் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வருட நத்தார் தினம் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

“இவ்வருட கிறிஸ்துவின் பிறப்பு விழாவை இந்த உலகத்திலே சூழ்ந்திருக்கின்ற இந்த பயங்கர தொற்று வியாதியின் மத்தியிலே மக்கள் அழைக்கப்படுகின்றனர். முதலில் இப்படியான அழைப்புக்காக நாங்கள் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். இப்படியான ஒரு கட்டத்தில் எவ்வாறு நாம் கிறிஸ்துவினுடைய பிறப்பு விழாவை கொண்டாட வேண்டும் என இறைவன் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றார்.

இப்படியான காலத்தில்தான் ஆண்டவருடைய பிரசன்னம் அவருடைய வல்லமையை எல்லா மக்களும் அறிந்துகொள்ளும் விதமாக நாங்கள் எங்களுடைய திரு நாட்களை கொண்டாட வேண்டும். உதாரணமாக வழமையாக எத்தனையோ ஆடம்பரங்களுடனும் எத்தனையோ விதமான களியாட்டத்துடனும் நத்தார் விழாவை கொண்டாடுவது வழக்கம்.

ஆனால் இவ் வருடம் அப்படியான ஆடம்பரங்களோடு செய்ய முடியாவிட்டாலும் அவற்றிலே நாங்கள் பயன்படுத்துகின்ற பல்வேறுவிதமான தேவையில்லாத செலவுகளை ஆடம்பரங்களை எல்லாவற்றையும் தவிர்த்து அவற்றை இந்த வருடத்தில் நாங்கள் பயனுள்ள விதத்தில் பயன்படுத்தி கொண்டாடுமாறு இறைவன் எங்களுக்கு அழைப்பு விடுக்கின்றார்.

குறிப்பாக இந்த காலத்தில் பல்வேறு தேவைகளோடு வாழ்கின்ற மக்கள் ஏழை எளியவர்களுக்கு நாங்கள் இரக்கம் காட்டி பல்வேறு வழிகளில் எங்களுடைய பணங்களை விரயம் செய்யாது அவற்றையெல்லாம் தொகுத்து அவற்றை பயனுள்ள விதத்தில் மக்கள் வாழ்வு பெறும் பொருட்டு அவற்றை நாங்கள் பயன்படுத்தி இல்லாதவர்களோடு பகிர்ந்து கொண்டு வாழ்வதற்கு இந்த வருட கிறிஸ்துமஸ் விழா எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!