இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை! – பிரிட்டன் தூதுவர் உறுதி.

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை கொண்டு வரப்படும் என இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன், தெரிவித்துள்ளார். அதன் உள்ளடக்கம் மற்றும் அதற்கான ஆதரவுத் தளம் என்பன தொடர்பில் ஜனவரி மாதம் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவருடன் நேற்று நேரில் நடத்திய சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறினார்.

நேற்றுக் காலை இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டனை, கொழும்பிலுள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினேன். இரண்டு மணி நேரம் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது எதிர்வரும் ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை மீது புதிய பிரேரணை கொண்டு வருவதில் பிரிட்டன் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது எனவும், எதிர்வரும் ஜனவரி மாதமே அந்தப் பிரேரணையின் உள்ளடக்கம் மற்றும் ஆதரவுத்தளம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் எனவும் தூதுவர் தெரிவித்தார்.

புதிய பிரேரணையானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும், இலங்கை அரசு பொறுப்புக்கூறலிருந்து தப்பிப்பிழைக்க முடியாத வகையிலும் அமையவேண்டும் எனவும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே பரிந்துரைகள் இருக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது என்று அவரிடம் சுட்டிக்காட்டினேன் என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!