சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

எதிர்வரும் ஆண்டில் கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக 2 இலட்சம் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாக பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ மற்றும் சமுர்த்தி அதிகாரிகள் ஆகியோருக்கு இடையில் அலரி மாளிகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி போன்ற சுய தொழில் வாய்ப்புகளை இதன் ஊடாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அடிப்படையில் பெண் தொழில்முனைவோரை தெரிவுசெய்து, வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான பயிற்சி மற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக, கிராமப்புற பெண்களை ஊக்குவிப்பதற்கும், வேலையற்ற இளம் சமுதாயத்தினரின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சுயதொழில் வாய்ப்புகளின் ஊடாக தயாரிக்கப்படும் கிராமப்புற உற்பத்திகளுக்கான சந்தையை உருவாக்குவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதற்காக 25 ஆயிரம் புதிய விற்பனை நிலையங்களை திறக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை கிராம செயல்படுத்தும் பொறுப்பு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு காணப்படுவதாகவும் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!