இணைய வாயிலாக பணத்தை பறிக்கும் மோசடி கும்பல்: பின்னணியில் சீனர்கள்!

இணையதளம் வாயிலாக கடன் பெறும் நபர்களை மிரட்டி, பணத்தை பறித்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த மோசடி கும்பலுக்கு பின்னணியில் சீனாவைச் சேர்ந்தவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பெங்களூரில் வசித்து வந்த சீனாவை சேர்ந்த ஜியா யாவாவ், யுவான் லூன், பிரமேதா, பவான் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் 50 க்கும் மேற்பட்ட கடன் வழங்கும் செயலிகளை உருவாக்கி, இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மக்களிடம் கடன் கொடுத்து பணத்தை வசூல் செய்துள்ளனர்.

மேலும், பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றை அமைத்து, அதில் 200 பேர் வரை பணியாளர்களாக நியமனம் செய்து, மாதம் எட்டாயிரம் ஊதியம் வழங்கி கடன்களுக்கு வட்டியை வசூல் செய்ய வைத்துள்ளனர். இவ்வாறாக மொத்தமாக பத்து நிறுவனங்களில் நடந்தி வந்த நிலையில், செயலி மூலமாக கொடுத்த கடனைத் திரும்பப் பெறவும், வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த ஊழியர்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலமாக, சென்னையில் சுமார் 600 சிம்கார்டுகள் வாங்கி இருப்பதும் தெரியவந்தது. மேலும், இந்த சிம் கார்டுகள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்த நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயரில் ஆவணங்களை தயாரித்து சிம் கார்டுகளை வாங்கியதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு, பல அதிர்ச்சி உண்மைகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!