கொல்லைப் புறத்தைச் சுற்றிவளைக்கும் சீனா – என்ன செய்யப் போகிறது இந்தியா?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் நாள், ரூபா 500 மற்றும் ரூபா 1000 நாணயத்தாள்கள் செல்லுபடியற்றன என அறிவிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை எண்ணியல் (டிஜிற்றல்) மற்றும் பணமில்லா பொருளாதாரமாக மாற்றுவதற்கான இந்தியாவின் முயற்சி தொடர்பில் பெரும்பாலான இந்தியர்கள் கவனத்தைக் குவித்திருந்தனர்.

இந்தத் தருணத்தில், இதற்கு ஒப்பான முக்கியத்துவம் கொண்ட இந்தியாவின் மூலோபாயத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் செய்தி ஊடகங்களில் ஓரங்கட்டப்பட்டிருந்தது.

சீனா, தனது அதிகரித்து வரும் பூகோள நலன்களை விரிவுபடுத்தும் அதேவேளையில், இந்தியப் பிராந்தியத்தைத் தனது அதிகாரத்திற்குள் கொண்டு வருவதற்கான மூலோபாய நகர்வுகளையும் விரைந்து மேற்கொண்டு வருகின்றது என்கின்ற செய்தியே இந்திய ஊடகங்களில் முக்கியத்துவம் வழங்கப்படாது ஓரங்கட்டப்பட்டுள்ளது.

சோமாலிய கடலில் இடம்பெறும் கடற்கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 2008 தொடக்கம் சீனக் கடற்படையினர் சோமாலியாவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான கடற்கொள்ளைகளைக் கட்டுப்படுத்துவதில் நீர்மூழ்கிக்கப்பல்களின் பங்களிப்புத் தேவையில்லை என்கின்ற போதிலும், சீனாவால் சோமாலியாவில் மரபுசார் மற்றும் அணுவாயுத நீர்மூழ்கிக்கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஏற்கனவே மோதல் நிலவும் தென் சீனக் கடலில் சீனா தனது இராணுவத் தளங்களை உருவாக்கியுள்ளதுடன் ஏழு செயற்கைத் தீவுகளை இராணுவமயப்படுத்தியுள்ளது. அத்துடன் சீனா, பிலிப்பைன்சின் புதிய அதிபர் றொட்றிகோ டுற்றேற்றுடன் 20 டொலர் பில்லியன் மதிப்புடைய உதவித் திட்டத்திலும் கைச்சாத்திட்டதன் மூலம் பிலிப்பைன்சுடனான உறவை சீனா மேலும் நெருக்கமாக்கியுள்ளது.

இவ்வாண்டின் ஆரம்பத்தில், சீனா தனது முதலாவது வெளிநாட்டு கடற்படைத் தளத்தை டிஜிபோட்டியில் அமைத்துக் கொண்டது. இங்கு அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடல்சார் கண்காணிப்பு வான்கலம் தரித்து நிற்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது சோமாலிய கடற்கொள்ளையானது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் தனது போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களைத் தரித்து நிறுத்துவதற்கான தளவசதிகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம், இம்மாக்கடலில் தனது கடற்படை நிரந்தரமாகத் தரித்து நிற்பதை உறுதிப்படுத்துவதற்காக சீனாவால் பல்வேறு நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்மூலம் சீனா தனது வர்த்தக கடற் பாதைகளைப் பாதுகாப்பதற்கும் தனது புதிய திட்டமான கரையோர பட்டுப்பாதைத் திட்டத்தை இலகுவாக நடைமுறைப்படுத்துவதற்கும் முயல்கிறது. சீனாவின் இவ்வாறான நகர்வுகள் சில தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, சிறிலங்காவில் சீனாவால் கட்டப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 சதவீத உரிமை சீனாவிற்கு வழங்கப்படவுள்ளது. இந்தியாவின் மிக நெருங்கிய அயல்நாடான சிறிலங்காவில் அமைந்துள்ள ஆழ்கடல் துறைமுகமான அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு 18 கிலோமீற்றர் தொலைவில் பாரியதொரு விமான நிலையம் ஒன்றை சீனா அமைத்திருந்தது. இதற்கு மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையம் எனப் பெயரிடப்பட்டது.

சீனாவால் இத்தகைய திட்டங்களுக்காக வழங்கப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தக்கூடிய நிலையில் சிறிலங்கா இல்லாததாலேயே தற்போது அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தல விமான நிலையம் போன்றவற்றை 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்குவதென சிறிலங்கா தீர்மானித்தது.

கொழும்பு தொடக்கம் காலி துறைமுகத்தை இணைக்கும் நெடுஞ்சாலை உட்பட பல்வேறு கட்டுமானத் திட்டங்களுக்காக சீனாவால் வழங்கப்பட்ட கடனை ஈடுசெய்வதே இவ்விரு கட்டுமானங்களையும் சீனாவிற்கு நீண்ட காலக் குத்தகைக்கு வழங்குவதற்கான சிறிலங்காவின் தீர்மானமாகும்.

அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் மத்தல விமானநிலையம் ஆகிய இரண்டையும் சீனாவிற்கு சிறிலங்கா குத்தகைக்கு வழங்குவதானது இந்தியாவிற்கு அருகிலுள்ள சிறிலங்காவில் சீனாவின் கடற்படைத் தளம் ஒன்று உருவாவதற்கு வழிவகுக்கும்.

இதேவேளையில், அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் தாய்வான் அதிபருடன் பேச்சுக்களை நடத்தியமையானது சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் முரண்பாடுகள் சாத்தியமான வகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

கடந்த வாரம் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கடல் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு விமானமான P-8A சீனாவால் கட்டப்பட்ட மத்தல விமானநிலையத்தில் தரித்து நின்றது. இந்தியாவின் கொல்லைப்புறத்தில் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு அதிகாரத்துவ சக்திகளும் தரித்து நிற்கும் செய்தியானது இந்தியாவிற்கு நல்லதல்ல.

அடுத்ததாக, சீனாவால் கட்டப்பட்ட இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் 2017 ஜனவரியில் பங்களாதேசத்தால் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு நீர்மூழ்கிக்கப்பல்களையும் பங்களாதேஸ் வங்காள விரிகுடாவில் உள்ள பொருளாதார வலயத்தை விரிவுபடுத்தப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே பங்களாதேசுக்கு போர்க்கப்பல்களை விற்பனை செய்த சீனா தற்போது பங்களாதேசில் நீண்ட கால பிரசன்னத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. மானிய அடிப்படையில் பங்களாதேசுக்கு நீர்மூழ்கிக்கப்பல்கள் விற்பனை செய்துள்ளது மட்டுமன்றி, சீன அதிபர் ஜீ ஒக்ரோபார் 14 அன்று பங்களாதேசுக்கு பயணம் செய்தபோது பங்களாதேசுடன் 13.6 பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்ததார். சீனாவால் பங்களாதேசுக்கு 20 பில்லியன் டொலர் கடனாகவும் வழங்கப்பட்டுள்ளது.

சீனாவானது தனது ‘மலாக்கா பிரச்சினையைத்’ தீர்ப்பதற்காக மலேசியாவிற்கு அதன் கிழக்குக் கரையோர தொடருந்துப் பாதையை அமைப்பதற்காக 13.75 டொலர் பெறுமதியான நிதியை மென்கடனாக வழங்கியுள்ளது. அத்துடன் மலேசியாவிற்கு தனது நான்கு போர்க்கப்பல்களை மானிய அடிப்படையிலும் சீனா விற்பனை செய்துள்ளது. இந்நான்கு போர்க்கப்பல்களும் 34 பில்லியன் டொலர் பெறுமதியானவை.

இதேபோன்று, சீனாவால் அமைக்கப்பட்ட நீர்மூழ்கிக்கப்பல்களைக் கொண்டுள்ள தாய்லாந்து கடந்த யூலை மாதம் சீனாவின் மூன்று மரபுசார் நீர்மூழ்கிக்கப்பல்களைக் கொள்வனவு செய்வதற்கான கட்டளையை வழங்கியதன் மூலம் சீனாவை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

தாய்லாந்துக்கு குறுக்கே உள்ளதும் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் பல நூறு மைல்கள் வரை கடலில் பயணம் செய்வதற்கும் பாதுகாப்பை அளிக்கக்கூடிய க்ரா இஸ்த்மஸ் கால்வாயைக் கட்டுவதற்கும் சீனா வெளிப்படையாகத் தயாராக உள்ளது. இக்கால்வாயானது தாய்லாந்து விரிகுடாவையும் அந்தமான் கடலையும் இணைக்கின்றது.

இறுதியாக, சீனாவின் அனைத்துக் காலநிலை நண்பனான பாகிஸ்தானிற்கும் சீனா பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது. சீனாவின் ஜின்சியாங்க் மாகாணத்தை சர்ச்சைக்குரிய வகையில் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் ஊடாக சீனா வரை தொடர்புபடுத்தக் கூடிய சீன-பாகிஸ்தான் பாதை ஒன்றை அமைப்பதற்காக குவடார் துறைமுக கட்டுமானத்திற்கும் அதனை நிர்வகிப்பதற்குமாக 51 பில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில், குவடார் துறைமுகத்தில் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்தவாறு கடற் பாதுகாப்பு கண்காணிப்பில் ஈடுபடவுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது.

குவடார் துறைமுகத்திற்கு கடற் பாதுகாப்பை வழங்குவதற்காக பாகிஸ்தான் கடற்படையால் சிறப்பு அதிரடிப் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிறிதொரு ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவால் நிதி வழங்கப்பட்டு கட்டப்பட்ட குவடார் அனைத்துலக விமான நிலையமானது இன்று பறப்பில் ஈடுபட்டுள்ள விமானங்களில் மிகப் பெரிய விமானமான A-380 எயார்பஸ் விமானத்தை செயற்படுத்தத் தயாராக உள்ளதாகவும் பிறிதொரு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் கால் பதித்துள்ள சீனாவின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள் போன்றன விரைவில் இந்தியாவின் கொல்லைப்புறத்தில் சீனாவால் கட்டப்பட்ட துறைமுகங்களில் தரித்து நிற்பதற்கு தளமிடப்படும். இதேவேளையில் சீனப் போர் விமானங்கள் சீனாவின் நிதியில் இந்திய மாக்கடல் பிராந்திய நாடுகளில் சீனாவால் அமைக்கப்பட்டுள்ள துறைமுகங்களுக்கு அருகில் சீனாவால் அமைக்கப்பட்ட விமானநிலையங்களில் நின்று செயற்படும்.

இந்தியாவும் அதன் நாடாளுமன்றமும் அதன் மக்களும் எண்ணியல் பரிணாமத்தை நோக்கிய பணமற்ற பொருளாதார சமூகம் ஒன்றை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தியுள்ள இதேவேளையில் சீனாவானது இந்தியாவின் கொல்லைப்புறத்தில் அமைந்துள்ள நாடுகளில் அகலக்கால் பரப்பி வருகிறது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் சீனாவின் அண்மைய கடல்சார் நகர்வுகளை முறியடிப்பதற்கு இந்தியப் பிரதமர் திரு.மோடி காத்திரமான தீர்மானங்களை மேற்கொள்வார் என நம்பப்படுகிறது.

ஆங்கிலத்தில் – Arun Kumar Singh*
வழிமூலம் – Asian age
மொழியாக்கம் – நித்தியபாரதி

Tags: ,