தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் மூவர் கைது!

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து, அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து வந்தது. இது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொள்ளாச்சியை சேர்ந்த சிவில் என்ஜினீயர் சபரிராஜன் (வயது 25), சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த சதீஷ் (28), பஞ்ஜோதிபாளையத்தை சேர்ந்த வசந்தகுமார் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் மாக்கினாம்பட்டியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி திருநாவுக்கரசு (27) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் போலீசில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி பாபு என்ற பைக் பாபு, செந்தில், ஆச்சிப்பட்டி வசந்தகுமார், பார் நாகராஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரால் தேடப்பட்டு வந்த மணிவண்ணன் என்பவர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து பணம் பறித்த வழக்கிலும் மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது அடிதடி மற்றும் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை முதலில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

சி.பி.ஐ. போலீசார் விசாரணையை தொடங்கியதும் முதலில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து கைதான மற்றவர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை சி.பி.ஐ. போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் பல பெண்களுடன் அவர்கள் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் இந்த செயலில் அவர்கள் மட்டுமே ஈடுபட்டு இருக்க வாய்ப்பில்லை. மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சி.பி.ஐ. போலீசார் சந்தேகித்தனர்.

இதைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் அவர்கள் யாருடன் எல்லாம் பேசினார்கள்? என்ற விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் வீடியோ எடுக்கப்பட்ட நாட்களில் ஏற்கனவே கைதான 5 பேரை தவிர மேலும் 3 பேரின் செல்போன் சிக்னல்கள் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்ததை சி.பி.ஐ. போலீசார் கண்டுபிடித்தனர்.

அந்த செல்போன் சிக்னல்கள் யாருடையது என்று விசாரித்தபோது, அவர்கள் பொள்ளாச்சி வடுகப்பாளையத்தை சேர்ந்த அ.தி.மு.க. நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் (வயது 34) மற்றும் வடுகப்பாளையம் பாபு என்ற பைக் பாபு (27), ஆச்சிப்பட்டி சங்கம்பாளையத்தை சேர்ந்த ஹெரேன் பால் (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. எனவே அவர்கள் 3 பேருக்கும், இந்த வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களை சி.பி.ஐ. போலீசார் பிடித்து விசாரித்தனர்.

இதில் பாலியல் வழக்கில் ஏற்கனவே கைதான சபரிராஜன் என்பவருடன் சேர்ந்து 2 பெண்களை கடத்தி சென்று அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி வந்தது தெரியவந்தது. அதன்பேரில் பாதிக்கப்பட்ட அந்த 2 பெண்கள் கொடுத்த புகாரின்பேரிலும், அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் சி.பி.ஐ. போலீசார் நேற்று முன்தினம் இரவு அருளானந்தம், பைக் பாபு, ஹெரேன் பால் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களை கோவை மகிளா கோர்ட்டில் நீதிபதி நந்தினிதேவி முன்பு ஆஜர்படுத்தினார்கள். அப்போது 3 பேரும், தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினார்கள். இதைத்தொடர்ந்து 3 பேரையும் வருகிற 20-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க. பிரமுகர் அருளானந்தம், பொள்ளாச்சியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். தந்தை இல்லை. தாய் மற்றும் ஒரு அண்ணன் மட்டும் உள்ளனர். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அருளானந்தம் வெங்காய வியாபாரமும் நடத்தி பணம் சம்பாதித்து வந்து உள்ளார். அவருக்கு கடந்த நவம்பர் மாதம்தான் திருமணம் நடந்தது. மேலும் கட்சியில் கடந்த ஒரு ஆண்டாக பொறுப்பு வகித்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பைக் பாபு இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் நடத்தி வந்துள்ளார். ஹெரேன் பால், தேங்காய் வியாபாரம் செய்து வந்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு வெளிஉலகுக்கு தெரிந்தபோதே ஹெரேன் பாலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று பேசப்பட்டது. ஆனால் அவர் அப்போது கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் அவர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. போலீசார் திடீரென்று கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி.பி.ஐ. போலீசார் கடந்த சில நாட்களாக பொள்ளாச்சியில் முகாமிட்டு, அவர்கள் 3 பேரையும் அடிக்கடி விசாரணைக்காக அழைத்து வந்தனர். இது ரகசியமாக நடந்துள்ளது. இது கைதான 3 பேரின் நண்பர்களுக்கு கூட தெரியவில்லை. இருந்தபோதிலும் அவர்கள் அவ்வப்போது விசாரணைக்கு ஆஜராகி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விசாரணைக்கு சென்ற அவர்களது செல்போன் மற்றும் நகை போன்ற உடைமைகளை உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு, 3 பேரையும் சி.பி.ஐ. போலீசார் கோவைக்கு காரில் அழைத்து வந்து கைது செய்தனர்.

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சுமார் 1½ ஆண்டுகள் கழித்து மேலும் 3 பேரை கைது செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!