ஐ.நாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள சிறிலங்காவின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

சட்டவாளர்களின் பிரசன்னமின்றி ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதித்தல் உள்ளடங்கலாக பல்வேறு மாற்றங்களைக் கொண்டுள்ள, சிறிலங்கா அரசாங்கத்தால் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பாக ஐ.நா அதிருப்திகளை வெளியிட்டுள்ளதாக சிறிலங்காவிற்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி உனா மக்காலி தெரிவித்தார்.

‘சட்டவாளர்களின் பிரசன்னமின்றி ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்குவதற்கு அனுமதி வழங்குதல் மற்றும் அனைத்துலக நீதி நியமங்களின் பிரகாரம் ஒருவர் 48 மணிநேரம் மட்டுமே முதற்கட்டமாகத் தடுத்து வைக்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ள போதிலும் சிறிலங்காவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் எவரும் ஆரம்ப கட்டமாக 72 மணிநேரம் தடுத்து வைக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் கீழ் ஒருவர் கைதுசெய்யப்படும் போதும் இது தொடர்பில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அல்லது அதனுடன் தொடர்புபட்ட பயங்கரவாதச் சட்டத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ளவையே பின்பற்றப்படும் எனவும் சிறிலங்காவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் நாம் அதிருப்தி அடைகிறோம்’ என மக்காலி ‘சண்டே ரைம்ஸ்’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாகப் பணியாற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் குழு ஒன்றை நியமிக்கப்பட்டுள்ளது என்கின்ற தவறான கருத்து நிலவுகிறது எனவும் சிறிலங்காவிற்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி மக்காலி தெரிவித்தார்.

‘இச்சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்துலக சட்ட நியமங்களுக்குப் பொருத்தமானதாக உள்ளதா என்பதை ஆராயுமாறு எம்மிடம் கோரப்பட்டது. இதன்காரணமாகவே ஐக்கிய நாடுகள் சபையானது இச்சட்ட மூலத்தை ஆராய்வதற்காக தனது அமைப்பிற்குள்ளும் வெளியேயும் உள்ள வல்லுனர்ககளைப் பயன்படுத்தி சிறிலங்காவில் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை ஆராய்ந்தது.

அத்துடன் அனைத்துலக சட்ட நியமங்கள் தொடர்பாகவும் இந்தச் சட்ட நியமங்களின் வரையறைகளுக்குள் நின்றவாறு எவ்வாறு புதிய சட்டமூலத்தை வரைவது என்பது தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் சபையால் உயர் மட்டக் கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகள் மேற்கொள்ளப்பட்டன’ என மக்காலி தெளிவுபடுத்தினார்.

சிறிலங்கா மீதான ஐ.நாவின் கவனமானது குறிப்பிடத்தக்களவு அதிகமாகக் காணப்படுவதாகவும் வதிவிடப் பிரதிநிதி தெரிவித்தார். ‘ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகவோ அல்லது சிவில் அமைப்பாகவோ இல்லாத உள்ளக அரசாங்க அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையானது அவசியமான வேளைகளில் அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. ஆனால் நாங்கள் எப்போதும் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் பணிபுரிய வேண்டியுள்ளோம். ஏனெனில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினர்களையும் எங்களால் ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது என்பதே இதற்கான காரணமாகும்’ எனவும் மக்காலி குறிப்பிட்டார்.

‘நாங்கள் ஒருபோதும் எல்லோரையும் திருப்திப்படுத்தும் விதமாக நடந்து கொள்ள முடியாது. அதாவது நாம் தொடர்ச்சியாக சமநிலைப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டியிருப்பதும் இவற்றின் ஊடாக மக்களின் தேவைகள் என்ன என்பதை நோக்குவதுமே இதற்கான காரணமாகும்’ என சிறிலங்காவிற்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி தெரிவித்தார்.

‘குறித்த நேரத்தில் யார் மிகவும் நலிவுற்றுள்ளனர் என்பது தொடர்பாக நாங்கள் எப்போதும் ஐ.நாவில் ஆராய்வோம். அதாவது போர்க் காலத்தில், போருக்குப் பின்னான காலப்பகுதியில் என நோக்கும் போது போர்க் காலப்பகுதியில் மக்கள் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பார்கள்’ என மக்காலி தெரிவித்தார்.

ஆனால் தற்போது ‘பேண்தகு அபிவிருத்தி இலக்குகள்’ என அழைக்கப்படும் புதியதொரு கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இத்திட்ட வரைபானது ‘எந்தவொரு நாடும் பின்தள்ளப்படக் கூடாது’ என்பதைக் குறிக்கிறது. இதன்காரணமாகவே ஐக்கிய நாடுகள் சபையால் சிறிலங்காவில் மிகவும் நலிவுற்றவர்களை இலக்கு வைத்து அவர்களின் அபிவிருத்திக்காக திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என மக்காலி குறிப்பிட்டார்.

சிறிலங்காவை எடுத்துக் கொண்டால், வடக்கு கிழக்கானது மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக இருப்பதால் அங்கே புனர்வாழ்வுப் பணிகளை ஐ.நா மேற்கொண்டது.

‘தற்போது சிறிலங்காவை விட மோசமான பாதிப்புக்களைக் கொண்ட நாடுகளை நோக்கி புதிய நிகழ்ச்சித் திட்டத்துடனும் திட்டச் சுற்றுடனும் ஐ.நா பயணிக்கின்றது. ஆகவே குறித்த நேரத்தில் எந்த நாடு மிகவும் நலிவுற்றுள்ளது என்பதை ஆராய்ந்து பாதிக்கப்பட்ட நலிவுற்ற மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்காகும்’ என சிறிலங்காவிற்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.

‘நாங்கள் தற்போது வெவ்வேறு பாதிக்கப்பட்ட நாடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் எமது பணிகளை ஆற்றுகிறோம். ஆகவே நாங்கள் யாரையாவது கைவிட்டுச் சென்றுள்ளோமா? அவ்வாறு நாங்கள் செய்யவில்லை என நான் நினைக்கின்றேன்’ என மக்காலி தனது நேர்காணலில் குறிப்பிட்டார்.

போர் என்பது மக்களை உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நலிவடையச் செய்துள்ளது. போருக்கு முன்னர் மக்கள் தம்மிடம் வைத்திருந்த சொத்துக்களை அவர்கள் தற்போது இழந்துவிட்டனர். ஆகவே இந்த மக்கள் மீண்டும் தமது வாழ்விற்குத் திரும்பி வருவதற்கு என்ன தேவை என்பதை நாம் ஆராய்ந்து அவற்றைப் பெற உதவியுள்ளோம் என மெக்காலே தெரிவித்தார்.

‘இந்த மக்களுக்கு நீதி மற்றும் உண்மை என்பதும் தேவைப்படுகின்றன. ஆனால் தெற்கில் வறுமைக் கோட்டில் வாழும் மக்கள் தொடர்பாகவும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த மக்களும் ஐ.நாவின் பேண்தகு அபிவிருத்தி இலக்கின் கீழ் உட்சேர்க்கப்படுவது தொடர்பாக நாம் கலந்துரையாட வேண்டிய தேவையுள்ளது’ எனவும் அவர் தெரிவித்தார்.

‘நான் அரசியல் ரீதியாக விளங்கிக் கொள்கிறேன். எமது கலந்துரையாடல்களுக்கு உட்படாத மக்களும் உள்ளனர் என்கின்ற கருத்தை நான் புரிந்து கொள்கிறேன். சிறிலங்கா போன்ற நாடுகளின் அரசாங்கங்களுடன் இணைந்து ஐ.நா எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது தொடர்பாகவும் ஐ.நா மிகக் கவனமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது என்கின்ற புரிந்துணர்வும் உள்ளது என நான் நினைக்கிறேன்’ எனவும் மக்காலி குறிப்பிட்டார்.

சிறிலங்காவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாற்றம் பயனுள்ளது என ஐ.நா உணர்ந்து கொண்டது என்பதையும் இவர் ஏற்றுக்கொண்டார். அத்துடன் ஏனைய நாடுகளிலிருந்து ஐ.நாவால் கற்றுக் கொண்ட பாடங்களை சிறிலங்காவில் கொள்கை அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவதற்காக ஐ.நா பயனுள்ள வகையில் பிரயோகித்தது. சிறிலங்காவில் மனிதாபிமான உதவி அபிவிருத்தி மற்றும் நீண்டகால நிலைபேண் அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்காக 500 பணியாளர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் பணிபுரிந்தனர் எனவும் மெக்காலே தெரிவித்தார்.

போரால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் வாழும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் பிரச்சினைகளை அதிகம் கவனத்திற் கொண்டே ஐ.நா பணியாற்றியுள்ளது. இங்கு மீள்குடியேற்றம் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஆதரவு வழங்கியது. விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் நீர் முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல்களுக்கும் பங்களிப்பு வழங்கப்பட்டது என மக்காலி மேலும் குறிப்பிட்டார்.

‘போருக்குப் பின்னான தேவைகளை நிறைவேற்ற வேண்டியது தற்போதைய கடப்பாடாகக் காணப்படுகின்றது. நடுத்தர வருமானம் பெறும் நாடாக சிறிலங்கா உள்ளதால் வழமையாக இவ்வகை நாடுகளுக்காக ஐ.நாவால் வழங்கப்படும் உதவிகளை தொடர்ந்தும் ஐ.நா மேற்கொண்டு வருகிறது. மீளிணக்கம் என்பது அவ்வளவு இலகுவாகவும் விரைவாகவும் செய்து முடிக்கப்பட முடியாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனாலும் சிறிலங்காவில் இது தற்போது தான் ஆரம்பித்துள்ள என நான் நினைக்கிறேன். எதைச் செய்யவேண்டும், என்ன செய்யப்பட்டுள்ளது தற்போது என்ன தேவையாக உள்ளது தொடர்பான கருத்துக்கள் சுதந்திரமான கருத்து வெளிப்படுத்தல்கள் மூலம் சேகரிக்கப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன்’ என இவர் தெரிவித்தார்.

‘நல்லிணக்கம் என்பது தேசியம் சார்ந்த விடயமாக மாறவேண்டும். இது சிவில் சமூகம் மற்றும் அரசாங்க வட்டங்களுக்கு வெளியேயும் இராணுவத்தின் செல்வாக்கிற்கு அப்பாலும் சுயாதீனமான ஒரு விடயமாக மாறவேண்டும். குறுகிய காலத்தில் மக்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் சிறிலங்கா எவ்வாறு இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்பதை கலந்துரையாடல்கள் மூலம் தெளிவாகப் பார்க்க வேண்டும்’ என மக்காலி தெரிவித்தார்.

‘சிறிலங்காவில் மக்கள் பெரும்பாலும் சமூகங்களாக வாழ்கின்றனர். அதாவது இன, மத, மொழி போன்ற ஒற்றுமைகளுடன் மக்கள் குழுமங்களாக வாழ்கின்றனர். இவ்வாறு வாழும் மக்கள் தமது அடையாளங்களை தமக்கான பாதுகாப்பு வலையாகப் பயன்படுத்துகின்றனர். சிறிலங்கா அரசாங்கமானது தேசிய ஒற்றுமை மற்றும் மீளிணக்கத்திற்கான அலுவலகம், நல்லிணக்கத்தை ஒருங்கிணைப்பதற்கான செயலகம் மற்றும் நல்லிணக்க அமைச்சு போன்றவற்றை உருவாக்கியுள்ளது.

ஆகவே இது தொடர்பான பணிகள் வேகமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். 2017ல் மக்கள் மத்தியில் பெருமளவான கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் மூலம் இந்தப் பணியை மேலும் விரைவுபடுத்த முடியும். இதற்கு நாங்கள் உந்துசக்தியாக இருக்க முடியும்’ என மக்காலி குறிப்பிட்டார்.

சிறிலங்காவில் சிக்கலான ஒரு சூழல் நிலவுவதாகவும் இவர் சுட்டிக்காட்டினார். ‘போரின் பின்னர் விரைவாகப் பணிகளை மேற்கொள்வதென்பது எப்போதும் கடினமானதாகும். பொருளாதாரம், சமூகம் போன்ற பல்வேறு முனைகளிலும் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள தேசிய அரசாங்கத்திற்கு தனது நாட்டை முன்னேற்றுவதென்பது மிகவும் கடினமான பணியாகும்’ எனவும் மெக்காலே குறிப்பிட்டார்.

ஐ.நா வானது சட்டம் மற்றும் ஒழுங்கு கட்டமைப்புக்களுக்கு ஆதரவளிப்பதில் ஆர்வங் காண்பித்தோம். ‘அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக சிறிய மனித உரிமைகள் குழுவொன்றை நாம் வழங்கினோம். பெண்கள், சிறுவர்கள், தடுப்பு விவகாரங்கள் தொடர்பாகப் பணியாற்றுவதற்காக நாங்கள் சிறப்புக் குழுக்களை வைத்திருக்கிறோம். அரசாங்கம் உதவி செய்யுமாறு வேண்டுகோள்களை விடுக்கும் போது தேசிய மற்றும் அனைத்துலக வளங்களைக் கொண்டு வல்லுனர்கள் அரசாங்கத்தைப் பலப்படுத்த முடியும்’ என சிறிலங்காவிற்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது சிறிலங்காவில் அனைத்துலக சமூகம் பங்களிப்பு செய்வதற்கான பயனுள்ள வழிகாட்டி ஆவணமாகவும் கட்டமைப்பாகவும் எஞ்சியுள்ளது. ‘இப்பரிந்துரையானது உயர் இலட்சியத்தைக் கொண்டுள்ளது. இது நேரத்திற்கு உகந்த ஒன்றாகவும் உள்ளது. இந்த ஆவணத்தில் குறிப்பிட்ட விடயங்களை சிறிலங்கா விரைவாக அமுல்படுத்தவில்லை’ எனவும் பிரதிநிதி குறிப்பிட்டார்.

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத் தொடரில், இதுவரை சிறிலங்காவில் எத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன, எவை முன்னெடுக்கப்பட வேண்டிய தேவையிலுள்ளன மற்றும் இவற்றுக்கான காலக்கெடு போன்றன ஆராயப்படும்.

‘சமாதான கட்டுமான முன்னுரிமைச் செயற்திட்டமானது’ கடந்த ஆண்டு சிறிலங்காவில் ஐ.நாவால் முன்னெடுக்கப்பட்ட பிரதான விடயங்களுள் ஒன்றாகும். இச்செயற்பாடானது ஜெனீவா பரிந்துரை தொடர்பான பரந்த விளக்கத்தை வழங்குகிறது. அத்துடன் ஐ.நா மற்றும் ஏனைய அமைப்புக்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க முடியும் என்பதையும் இது சுட்டிநிற்கிறது. இச்செயற்திட்டமானது மீளிணக்கம், கல்வி, மீள்குடியேற்றம் மற்றும் நீண்டகால நிலையான தீர்வுகள், மீண்டும் ஏற்படாது என்கின்ற நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் செயற்திட்டங்கள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.

வழிமூலம் – சண்டே ரைம்ஸ்
மொழியாக்கம் – நித்தியபாரதி

Tags: ,