வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக கூட்டம் நடத்த முயன்றதால் நிகழ்ச்சி மேடையை சூறையாடிய விவசாயிகள்!

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக கூட்டம் நடத்த முயன்றதால், ஹரியானா மாநில முதலமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி மேடையை விவசாயிகள் சூறையாடினர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் 47வது நாளை எட்டியுள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அவர்களுடன், மத்திய அரசு 8 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும், சட்டங்களை முழுவதுமாக திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஹரியானாவில் வேளாண் சட்டங்களின் நன்மையை விளக்கிகூறும் வகையில், அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் கிசான் மகா பஞ்சாயத்து என்ற நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. இதற்காக, கர்னால் மாவட்டம் கைம்லா கிராமத்தில் அமைக்கப்பட்ட மேடையை விவசாயிகள் சூறையாடினர்.

நாற்காலிகள், மேஜைகளை உடைத்து எறிந்த அவர்கள், வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து முதலமைச்சரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!