ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் சிவனேசதுரை சந்திரகாந்தன் விடுதலை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் இருந்து பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பிலான வழக்கினை தொடர்ந்து நடாத்த முடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து, குறித்த வழக்கில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!