தகர்க்கப்பட்ட நினைவிடத்தின் எச்சங்கள் பேணப்பட வேண்டும்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அழிக்கப்பட்ட நினைவிடம் மீள உடன் கட்டியெழுப்பப்பட வேண்டுமென்றும் அதன்போது முன்னைய நினைவிடத்தின் தகர்க்கப்பட்ட எச்சங்களும் பேணப்பட வேண்டுமென இலங்கையை தாயமாகக் கொண்ட பல்வேறு நாடுகளில் வதியும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி, இலங்கையை தாயகமாகக் கொண்ட பல்வேறு நாடுகளில் வதியும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் ZOOM தொடர்பு ஊடகம் வழியாக நடத்திய கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் வழியாக இந்த அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது.

‘நினைவிடங்களை அழிக்கலாம், நினைவுகளை அல்ல’ என்ற தொனிப்பொருளில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “2009 போரின் முடிவின்போது, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் மக்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துள், பாதிக்கப்பட்ட மாணவர்களால் நிறுவப்பட்டிருந்த நினைவிடம் இரவோடிரவாகத் தகர்க்கப்பட்டதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். வெறுமனே மீள அடிக்கல் நடுவதோ, மாணவர்களின் போராட்டத்தினை இதன்மூலம் முடித்து வைப்பதோ தீர்வாகாது.

அழிக்கப்பட்ட நினைவிடம் மீள உடன் கட்டியெழுப்பப்படல் வேண்டுமென்றும் அதன்போது முன்னைய நினைவிடத்தின் தகர்க்கப்பட்ட எச்சங்களும் பேணப்பட வேண்டுமென வலியுறுத்த விரும்புகின்றோம். நினைவிடங்களை அழிப்பதானது நினைவுகளை ஆழமாக்கி மேலும் வலுப்படுத்தும் என்பதை அதிகாரங்கள் அறியாது.

ஒருபுறம், போர் வெற்றியைக்கொண்டாடும் சின்னங்களையும் சிற்பங்களையும் நிர்மாணித்துப் பேணி வருகிறது இலங்கை அரசு. மறுபுறத்தில் நீண்டகால அரசியல் ஒடுக்குதலின் வழியாக கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் தமிழ் மக்கள் அமைத்த நினைவுச் சின்னங்களைத் தகர்க்கிறது. நினைவுகூரும் அடிப்படை உரிமையையும் அவர்களுக்குத் தடை செய்கிறது.

நினைவிடங்களை இடிப்பதும், ஒடுக்கப்படும் மக்களின் வரலாற்றையும் மரபையும் சுவடுகளையும் அடையாளங்களையும் அழிப்பதும் கொடுங்கோன்மை அரசுகளதும் வெற்றியில் திளைப்போரதும் வழமை. எனினும், இப்போதுள்ள மூர்க்கமான இலங்கை அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கு எதிராக வெளிப்படையாக இதனை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இது முழு இலங்கையும் சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதைப் போலியாக நிறுவ முயலும் ஒரு பாரிய தொல்லியல், பண்பாட்டு, மரபுரிமைத் திட்டத்தின் ஒரு அங்கமாகும்.

ஏற்கெனவே, வடக்கிலும் கிழக்கிலும் நினைவிடங்களையும் சிலைகளையும் இடித்துத் தகர்த்த வரலாறு இலங்கை அரசாங்கங்களுக்கு இருக்கின்றன. 1974இல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று கொல்லப்பட்டவர்களுக்காக நிறுவப்பட்ட நினைவுத் தூண்கள் எத்தனை தரம் இடிக்கப்பட்டன என்பதை நாங்கள் அறிவோம். யாழ் நூலக எரிப்பு ஒரு வரலாற்று, பண்பாட்டு அழிப்பாகும்.

இன்றைய இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது இலங்கையின் எல்லா மக்களுக்கும் எதிரான கொடும் ஒடுக்குமுறையை முன்னெடுத்து வருகிறது. கொரோனாவை காரணம் காட்டி, மரணிக்கும் முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் உடல்களை அம்மக்களின் மரபு, நம்பிக்கைகளைப் புறம் தள்ளிவிட்டு, சர்வதேச நியமங்களையும் மீறி எரித்து வருகிறது. முஸ்லிம் வெறுப்பை பகிரங்கமாகவே விதைக்கிறது.

தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கு மத்தியில் அச்சத்தினையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் முகமாகவே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன என்பதை மிகுந்த கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

போரில் அநியாயமாக கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் மரணத்தினை, அவர்தம் மக்கள் நினைவுகூர்வதும் அதற்கு நினைவுச் சின்னம் அமைப்பதும் அதனைப் பேணுவதும் அம்மக்களின் அடிப்படை உரிமையாகும். அந்த மக்களைப் போரில் கொன்ற இலங்கை அரசாங்கம் இதனை தொடர்ச்சியாகவே மறுத்து வருகிறது.

அதனை நினைவுகூரும் அடையாளங்களை அரசியல், இனவாத மேலாதிக்க நோக்கில் அழித்தொழித்து வருவது அழிப்பின் தொடர்ச்சியான செயலே ஆகும். இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு, மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறாமல் அரசாங்கம் மேலும் மேலும் வேண்டுமென்றே நல்லிணக்க செயன்முறைகளைத் தவிர்த்து வருகிறது.

இந்த ஒடுக்குமுறை இனவாத அரசுக்கு எதிராக, பல்வேறு வழிகளில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களும் சமூகங்களும் ஒன்றிணைந்து முன்செல்வது காலத்தின் தேவை. இந்த இனவாத, ஒடுக்குமுறை அரசின் தன்மையை சிங்கள மக்கள் புரிந்து கொள்வது முக்கியம். சிங்கள மக்களின் தார்மீக ஆதரவுதான் ஒடுக்கப்படும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கான மிகப்பெரும் பலமாகும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த நினைவிடத்தைத் தகர்த்தமைக்கு எதிரான போராட்டங்களில் முஸ்லிம் மக்களும், மலையக மக்களும், தென்னிலங்கை ஆதரவுச் சக்திகளும் பரவலாக இணைந்து கொண்டமை ஒடுக்கப்படும் மக்களின் உணர்வுத் தோழமை வலுப்படுவதைக் காட்டுகிறது.

இத்தகைய உணர்வுத் தோழமையின் வலுவும் தொடர்ச்சியும் வீச்சும்தான், ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்கான நம்பிக்கையாக அமைவதுடன் ஒடுக்குதலை எதிர்கொள்வதற்கான பலமாகவும் அமையும் என்பதை உறுதியாக நம்புகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!