நான்கு மாதங்களாக சாப்பிட முடியாமல் தவித்த பிரித்தானிய குழந்தை: பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பிரித்தானியாவில் 11 மாதக் குழந்தை ஒன்று நான்கு மாதங்களாக சரியாக சாப்பிட முடியாமல் தவித்துள்ளது. Swindonஇல் வாழும் Sofia-Grace Hill என்னும் அந்த குழந்தையால் திரவ உணவை மட்டுமே உண்ண முடிந்துள்ளது. நான்கு மாதங்கள் என்னென்னவோ செய்து பார்த்த Sofiaவின் தந்தை, அவளை மருத்துவர்களிடம் கொண்டு சென்றபோது, அவளுக்கு தொண்டை அழற்சி அல்லது வைரஸ் தொற்று ஏதாவது இருக்கலாம் என்றுதான் முதலில் நினைத்தார்கள் அவர்கள்.

பின்னர் எக்ஸ்ரே எடுத்தபோதுதான், Sofiaவுக்கு இருந்த பிரச்சினைக்கான காரணம் தெரியவந்தது.

Sofiaவின் தொண்டையில் பேட்டரி ஒன்று சிக்கியிருப்பதை எக்ஸ்ரே காட்டியது. பொம்மை கார்களுக்கு பயன்படுத்தப்படும் வட்டவடிவ பேட்டரி அது.

நான்கு மாதங்களாக அது குழந்தையின் தொண்டைக்குள் இருந்ததால், அந்த பேட்டரி துருப்பிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஆகவே, பிரச்சினை அதிகமாகிவிட்டது.

அந்த பேட்டரியில் உள்ள ரசாயனங்களால் Sofiaவின் தொண்டை அரித்துவிட்டது. ஆகவே, அவளால் திட உணவு உண்ண முடியாது. அந்த புண் ஆறுவதற்காகவும், தொண்டை சுருங்கி மூச்சு விட முடியாத நிலை ஏற்படுவதை தடுக்கவும், அவளது தொண்டையில் குழாய் ஒன்றை பொருத்தியுள்ளார்கள் மருத்துவர்கள்.

நல்லவேளையாக அந்த பேட்டரி பழைய பேட்டரி, அதில் சார்ஜ் இல்லாததால்தான் Sofia உயிர் பிழைத்தாள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Sofia மெதுவாக உடல் நலம் முன்னேறி வரும் நிலையில், குழந்தைகளுக்கு பேட்டரி பொருத்திய பொம்மை கார்களை விளையாடக் கொடுப்பது குறித்து எச்சரிக்கிறார் Sofiaவின் தந்தையான Calham Hill.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!