கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் திறந்து வைப்பு

கச்சதீவில் ஸ்ரீலங்கா கடற்படையினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகராசம் ஆண்டகையினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் புதிய ஆலயம் ஸ்ரீலங்கா கடற்படையினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டது.

ஆலய நிர்மாண பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி புதிய ஆலய திறப்பு விழா இடம்பெறவிருந்தது.

எனினும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி உயிரிழந்ததை தொடர்ந்து ஆலய திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையிலேயே இன்று யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாரின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஆலய திறப்பு விழாவில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம், ஸ்ரீலங்காவிற்கான இந்திய உதவி தூதுவர் ஆ.நடராஜன், ஸ்ரீலங்கா கடற்படை தளபதி, கடற்படையினர், அருத்தந்தையர்கள், அருட்சகோதரிகள், உள்ளிட்ட பொது மக்கள், பங்கேற்றனர்.

ஆலய திறப்பு விழாவில் பங்கேற்ற மக்களுக்கான விசேட படகு சேவையை கடற்படையினர் மேற்கொண்டனர்.

அத்துடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழாவில் இந்தியாவிலிருந்தும் அதிகளவான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதேவேளை, எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கை பக்தர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என ஸ்ரீலங்காவிற்கான இந்திய உதவி தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்தார்.

Tags: ,