மண்டைதீவில் கடற்படைக்கு காணி அளவீட்டுக்கு எதிராக போராட்டம்!

மண்டைதீவு பகுதியில் உள்ள பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு எதிராக நேற்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மண்டைதீவு – ஜே107 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட 29 பேரின் 18 ஏக்கர் பரப்பு காணி சுவிகரிப்பதற்காக, நில அளவைத் திணைக்களத்தினரால் காணி அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காணி உரிமையாளர்களும் பொதுமக்களும் அரசியல்வாதிகளும் அங்கு திரண்டிருந்தனர்.

காணிகளை அளவீடு செய்ய கடும் எதிர்ப்பு வெளிப்படுத்திய நிலையில், காணிகளை அளவீடு செய்யாமலே நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் செல்ல தயாரான நிலையில, பொலிஸ் பாதுகாப்புடன் நில அளவை திணைக்கள அதிகாரிகள் மீண்டும் அங்கு வந்து காணிகளை அளவீடு செய்ய போவதாக அறிவித்தனர்.

ஆயினும், காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாதென்று எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களும் அரசியல் பிரமுகர்களும் காணிகளின் உரிமையாளர்களும் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதன் பின்னர் அங்கு வருகை தந்த வேலணை பிரதேச செயலாளர சோதிநாதன், இங்குள்ளவர்களின் எதிர்ப்பு காரணமாக காணி அளவிடுவதை நிறுத்துவதாகவும் காணி அமைச்சுடன் இது குறித்து பேசி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அதுவரையில் காணி அளவீடு மேற்கொள்ளபடாதென்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, நில அளவை திணைக்களத்தினரும் பொலிஸாரும் திரும்பி சென்றனர். இதன் பின்னர் அங்கு நின்றிருந்த மக்களும் அரசியல்வாதிகளும் சென்றனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய 4 தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றாக இணைந்து, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!