இம்மாதம் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கிடைக்குமா? : அநுரகுமார கேள்வி!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான ஆயிரம் ரூபாவை ஜனவரி 25 ஆம் திகதியன்று பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என தாம் அறிந்துக்கொள்ள விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2020 ஆண்டு பெப்ரவரி மாதம் பெருந்தோட்ட தொழிலாளர்களது அடிப்படை சம்பளத்தை ஆயிரமாக அதிகரிப்பது குறித்து நான் சபையில் வினவினேன். மாதச் மாதம் முதலாம் திகதியில் இருந்து ஆயிரம் ரூபா கொடுக்கப்படுமென பிரதமர் தெரிவித்தார்.

இது தொடர்பில் பெருந்தோட்ட நிர்வாகத்துடன் இணக்கப்பாடுக்கு வரமுடிந்துள்ளதா என வினவியபோது, அதற்கு ரமேஸ் பத்திரன அமைச்சர் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுகின்றது. இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என கூறும் போதே பிரதமர் எழுந்து கருத்து தெரிவித்தார்.

பெருந்தோட்ட உரிமையாளர்கள் என்ன கூறினாலும் நாங்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளோம் ஆகவே ஆயிரம் ரூபா கொடுக்கப்படுமென தெரிவித்தார். ஆனால் முதலாம் திகதி கிடைக்கவில்லை.

அடுத்ததாக ஆறுமுகன் தொண்டமானின் இறுதிகிரிகை இடம்பெற்ற அன்று. அவரின் உடல் வைக்கபட்ட இடத்தில் பிரதமர் ஒரு விடயத்தை தெரிவித்தார். தன்னிடம் இறுதியாக உரையாற்றும் போது தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவே அவரால் கேட்கப்பட்டதாகவும் அதனால் தாம் அதனை பெற்றுத் தருவதாக கூறினார்.

எமது மரபில் ஒரு விடயம் உள்ளது. இறந்த ஒருவரின் உடலுக்கு முன் வழங்கப்படும் வாக்குறுதி சத்தியமாக கொள்ளப்படும். அடுத்து வரவு செலவு திட்டத்தில் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படுமென தெரிவித்தார். இதனை கேட்ட மக்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாடினர்.

அப்படியானால் இந்த மாதம் 25 ஆம் திகதி குறித்த அடிப்படை சம்பளம் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படுமா என அறிந்து கொள்ள விரும்புகின்றேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!