மேல்மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் சாத்தியம்? : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்று மாணவர்களுக்காக 907 பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி குறித்த பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்ப்ட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளே இவ்வாறு திறக்கப்படவுள்ளன.

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள சாதாரண தரப்பரீட்சைக்கு மேல் மாகாணத்திலிருந்து 79 ஆயிரம் மாணவர்கள் தோற்றவுள்ளதுடன் ஆயிரத்து 576 பாடசாலைகள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று கல்வியமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களினால் எதிர்வரும் 28 29 மற்றும் பெப்ரவாரி 01 ஆம் திகதி ஆகிய தினங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு தமது பகுதிகளில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இதன் போது எடுக்கப்படும் தீர்மானங்களை எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் கல்வியமைச்சுக்கு அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது,

அதன் பின்னர் மேல் மாகாணத்தில் கொரோனா தொற்று அபாயமற்ற பகுதிகளில் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!