எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திற்கும் தாம் கிழக்கு முனையத்தை வழங்கவில்லை : மைத்திரி தெரிவிப்பு!

தனது ஆட்சிக் காலப்பகுதியில், வெளிநாட்டு நிறுனங்கள் பல கொழும்புத் துறைமுகத்தை கோரியிருந்த போதிலும், அதற்கு தான் இணங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவிக்கின்றார்.

களுத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனைக்குறிப்பிட்டார்

இதேவேளை, கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, துறைமுக தொழிற்சங்கங்களினால் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு முனையத்தைப் பாதுகாக்கும் தேசிய இயக்கம் மற்றும் கிழக்கு முனையத்தைப்பாதுகாக்கும் இலங்கை துறைமுக அதிகார சபையின் ஒன்றிணைந்த குழு என்பவற்றினால் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு முனையத்தின் 49 வீதத்தை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கும், 51 வீதத்தை இலங்கைதுறைமுக அதிகார சபையின் பங்குதாரர் ஒருவருக்கும் வழங்குவதற்கு அமைச்சரவை இணைக் குழு தீர்மானித்துள்ளதாக குறித்த தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே, குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்கப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது அத்துடன், இந்த விடயம் தொடர்பில், தாம் அமைச்சரவை இணைக்குழுவுக்கு பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம், துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டிலேயே இயங்க வேண்டும் எனவும், குறித்த தொழிற்சங்கங்களினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!