நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலா: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டால் விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ததை அடுத்து, சசிகலா உள்பட மூன்று பேரும் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் சசிகலாவுக்கு கடந்த 20-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதாவது காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவரை ஆம்புலன்சில் அழைத்து வந்து பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறை போலீசார் அனுமதித்தனர்.

அங்கு 2 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக சசிகலா நேற்று முன்தினம் கலாசிபாளையா பகுதியில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நுரையீரல் நிலை குறித்து சி.டி.ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவரது நுரையீரலில் தீவிரமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை முடிவில், சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியானது.

இதையடுத்து அவர் விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவை கட்டுக்குள் இருப்பதாக அவர்கள் கூறினர். சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று பிரச்சினை நீண்டகாலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

நுரையீரலில் தீவிர தொற்று ஏற்பட்டுள்ளதால், அது நிமோனியா பாதிப்பாக கருதப்படுகிறது. தற்போது அவருக்கு காய்ச்சல் குறைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா நேற்று காலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் சீரான நிலையில் செயல்படுகிறது. காய்ச்சலும் குறைந்துவிட்டது. நுரையீரலில் மட்டும் தொற்று தீவிரமாக உள்ளது. அதை குறைக்க தேவையான சிகிச்சையை தொடங்கியுள்ளோம். அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 98-ல் இருந்து 95 ஆக குறைந்துள்ளது.

ஆயினும் இந்த ஆக்சிஜன் அளவு உடலுக்கு போதுமானது தான். இதை இன்னும் குறையாமல் இருக்க வேண்டும். அவரது உடல்நிலையை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தற்போதைய நிலையில் பயப்படும் அளவுக்கு ஒன்னும் இல்லை. அவர் நன்றாகவே உள்ளார். அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி வருகிறோம். ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளன. அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இவ்வாறு ரமேஷ் கிருஷ்ணா கூறினார்.

சசிகலாவின் உறவினர்கள், அ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினர், சசிகலா சிகிச்சை பெற்று வரும் கொரோனா வார்டு அமைந்துள்ள கட்டிடம் முன்பு குவிந்திருந்தனர். இதனால் அங்கு மக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. விடுதலையாக இன்னும் சில நாட்கள் தானே இருக்கிறது, அதுவரை பொறுமையாக இருப்போம் என்று சசிகலா ஆதரவாளர்கள் அங்கு பேசிக்கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!