பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

சமூக வலைத்தளங்கள், இணையத் தளங்கள் மற்றும் செயலிகள் ஆகியவற்றின் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்களை இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறான மோசடிகளில் பெரும்பாலானவை, மக்களைக் கவருவதற்காக இலகு கடன் திட்டங்கள் ஊடாகவே முன்னெடுக்கப்படுவதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது

மேலும் குறித்த இலகு கடன் திட்டங்களுக்கான விண்ணப்ப மதிப்பீடுகளின் போது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மோசடியாளர்களினால் கோரப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, வரவு மற்றும் கடன் அட்டை இலக்கங்கள், குறித்த அட்டைகளுக்கான தனித்துவ குறியீட்டு இலக்கங்கள் மற்றும் அடையாள இலக்கங்கள், காலாவதி திகதி, ஒரு தடவைக்கான சரிபார்ப்பு குறியீடு ஆகியன கோரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இணைய வங்கிச் சேவைக்கான தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி செயலிகளுக்கான தனிப்பட்ட தகவல்கள் ஆகியனவும், கோரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த தனிப்பட்ட தகவல்களை எந்தவொரு காரணத்தின் அடிப்படையிலும், எந்தவொரு நபர் அல்லது நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்வதை தவிர்க்குமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், சமூக வலைத்தளங்கள், இணையத் தளங்கள் மற்றும் செயலிகள் ஆகியவற்றின் ஊடாக மேற்கொள்ளும் நிதி ரீதியான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!