ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் உறுப்பினர்களால் அறிக்கை கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் கடந்த 27 ஆம் திகதி நிறைவு பெற்றன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி வௌியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானியினூடாக ஐவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் தலைவர் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா செயற்பட்டதுடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் பந்துல அத்தப்பத்து மற்றும் ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் மங்கலிக்கா அதிகாரி உள்ளிட்டோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை 2019 செம்டெம்பர் மாதம் 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

அன்று முதல் 214 தடவைகள் கூடிய ஆணைக்குழு, 457 சாட்சியாளர்களிடம் 640 சந்தர்ப்பங்களில் விசாரணைகளை முன்னெடுத்தது.

அத்துடன், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் சாட்சியங்களாக 2,230 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!