இந்திய விவசாயிகளின் போராட்டம் உக்கிரம்; அதானி குழுமத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை கைப்பற்றும் முயற்சியின் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் அதானி குழுமத்திற்கு எதிராக இந்திய விவசாயிகள் நடத்தும் போராட்டங்கள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகின்றன.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் புது டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதானி மற்றும் அம்பானி வர்த்தகக் குழுமங்களுக்கு சாதகமான வகையில், விவசாய சட்டங்கள் மூன்றை மறுசீரமைக்க இந்திய அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விவசாயிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

முரண்பாடான நிலைமையை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்த போது கூறினார்.

புது டெல்லி, ஹரியானா மாநில எல்லைகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் இடங்களில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு உட்பிரவேசித்தல் மற்றும் வெளியேறுதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் பரஸ்பர தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் விவசாயிகளிடம் வந்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு கோரிய போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு புது டெல்லி பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

தேவைப்பட்டால் துப்பாக்கி சூடுகளையும் எதிர்கொள்ளத் தயார் என விவசாய ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைவரான ராகேஸ் டிகாயிட் தெரிவித்துள்ளார்.

விவசாயத்தை பன்முகப்படுத்துவதே புதிய மறுசீரமைப்பு யோசனை முன்வைக்கப்பட்டதன் நோக்கம் என இந்திய அரசாங்கம் தெரிவித்தாலும் அதனூடாக தமது வருமானம் இழக்கப்படும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக மேற்கு அவுஸ்திரேலிய மக்களும் சீக் கவுன்சில் உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இந்திய கன்சியுலர் ஜெனரல் அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, அதானி குழுமம் அவுஸ்திரேலியாவின் மத்திய குவின்ஸ்லாந்தில் முன்னெடுக்கும் நிலக்கரித் திட்டத்திற்கு எதிராக அந்நாட்டு சூழலியலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்தினால் சுற்றாடலுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!