தனி இராச்சியம் அமைக்க முயற்சித்தால் கைது செய்ய வேண்டியது பொலிஸாரின் பொறுப்பு – அஜித் ரோஹன

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு கோரி கிளிநொச்சியில் நேற்று (01) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று (02) கருத்து வௌியிட்டார்.

பொலிஸாரினால் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கும் தமது உறவினர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி கிளிநொச்சி – ஏ9 வீதியில் நேற்று 23 பேர் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

அவர்களால் விடுதலை செய்யப்பட வேண்டும் என கோருபவர்கள் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், LTTE இயக்கத்தை மீள உருவாக்க முயன்ற குற்றத்திற்காகவே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடிபொருட்கள் மற்றும் டெட்டனேட்டர் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

சர்வதேச ரீதியிலுள்ள புலம்பெயர் குழுவினர் காரணமின்றி அவர்கள் கைது செய்யப்பட்டதாக காண்பிக்க இத்தகைய ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்துக்கு எதிராக புரட்சி செய்வார்களாயின், தனி இராச்சியம் அமைக்க முயற்சிப்பார்களாயின் அத்தகைய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது எனவும் காரணமின்றி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் இதன்போது தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!