தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடக்காத ஒரு சந்திப்பு: -அரசியலில் புதிய கலாச்சாரம் தொடக்கம்

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடக்காத ஒரு சந்திப்பு நேற்று மாலை சென்னைத் தலைமமைச் செயலகத்தில் நடந்துள்ளது.நிச்சயம் எல்லோரும் கணித்திருப்பார்கள், எதைப் பற்றி சொல்கிறோம் என்றும். ஆம், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை, திமுக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் நிலவும் வறட்சி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து சுமார் 25 நிமிடங்கள் இரு தலைவர்களும் பேசியதாகக் கூறப்படுகிறது.இந்த சந்திப்பின் மூலம் தமிழக அரசியல் கலாச்சாரத்தில் மீண்டும் ஒரு புதிய அத்தியாயம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, தமிழக அரசியலில், முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சந்தித்து மாநில பிரச்னைகள் குறித்து பேசப்படவே இல்லை என்பது தகவல்.

சந்திப்பின் பின்னணி :

விவசாயிகள் பிரச்னை தொடர்பாக விவாதிக்க, சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை புதன்கிழமை மாலை 5.30 மணி முதல் சுமார் 15 நிமிஷங்கள் வரை ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, ஸ்டாலின் அளித்த பேட்டி:-தமிழகத்தில் 90-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியில் மரணமும் அடைந்துள்ளனர்.தினமும் 5 முதல் 6 விவசாயிகளாவது தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி உள்ளது. இதற்கு காவிரி நீர் முறையாக கிடைக்கவில்லை. மழை நீரும் பொய்த்து விட்டது. அதன் அடிப்படையில் வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி, சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்ற, சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இதை திமுக, பல்வேறு கட்சிகளும், விவசாய சங்க அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பங்களுக்கு, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் நிதி உதவி அளிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த…பொங்கல் திருவிழா நாளில், வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

டெல் தொழிற்சாலை பிரச்னை: வேலூர் மாவட்டம் டெல் வெடிமருந்து தொழிற்சாலையில் 250 பேர் வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு 5 மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், அந்த குடும்பங்கள் பரிதவித்து வருகிறது. இது தொடர்பாக, முதல்வரிடமும், தலைமைச் செயலரிடமும் எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் செல்லிடப்பேசியில் பேசியுள்ளார். இந்தக் கோரிக்கைகளை முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

சசிகலாவுக்குப் பதில்: இதையடுத்து, ஜல்லிக்கட்டு தொடர்பாக, திமுக உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிடுவதாக, சசிகலா வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி, மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின்:-

திமுக ஆட்சியில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தடை வந்த போது, உச்சநீதிமன்றம் வகுத்து தந்த விதிமுறைகளை பின்பற்றி, முதல்வராக இருந்த கருணாநிதி, அவசரச் சட்டம் கொண்டு வந்தார்.அதன் பிறகு, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினார். இது நூற்றுக்கு நூறு உண்மை. இதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க உள்ளேன். அதைத் தொடர்ந்து, அதிமுக ஆட்சியில், அந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை. அதனால் தான் இந்த தடையெல்லாம் வந்தது. இது தொடர்பான கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்து வைத்துள்ளோம் என்றார்.

Tags: ,