மறுக்கிறது சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு

ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்பப்படவிருந்த அடுத்த தொகுதி சிறிலங்கா இராணுவத்தினரை, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு அனுமதி அளிக்காமல் தடுத்து வைத்திருப்பதாக, வெளியாகிய செய்திகளை சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்காததால், லெபனானுக்கு 101 சிறிலங்கா படையினரைக் கொண்ட அணியை அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு, இந்தச் செய்தி தவறானது என்று கூறியுள்ளது.

ஆணைக்குழுவின் ஆய்வு முறைகளில் எந்த தாமதமும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அதன் தலைவர் தீபிகா உடகம, ஆய்வுக்குத் தேவையான தகவல்களை வழங்கினால் அதனை இலகுவாக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

காலக்கெடுவுக்குப் போதிய முன்னறிவிப்பு இன்றி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 21ஆம் நாள் கொழும்பில் இராணுவம் மற்றும் கடற்படை தளபதிகள், விமானப்படை தலைமை அதிகாரி, சிறப்பு அதிரடிப்படையின் மூத்த அதிகாரி, பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதிகள், வெளிவிவகார அமைச்சின் செயலர், மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்கள் இணைந்து, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைப் பணியகத்தின் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர்.

இதன்போது, ஐ.நா நியமங்களுக்கு ஏற்ப ஆய்வுசெயல்முறைக்கான விதிமுறைகள், மற்றும் அதனை துரிதப்படுத்துவது குறித்து இறுதி செய்யப்பட்டது. என்றும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!