ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீடிக்கும்: ஜோ பைடன் திட்டவட்டம்!

ஈரான் அரசு அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு இணங்கும் வரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படமாட்டாது என்று அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார்.

மேலும், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்தார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது.

இந்நிலையில் டெஹ்ரானுக்கு தெற்கே போர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியதால், அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் வலுத்தது.

இது குறித்து அமெரிக்காவின் புதிய அதிபரான ஜோ பைடன் கூறுகையில், கடந்த 2015 ஆம் ஆண்டின் அணு சக்தி ஒப்பந்தங்களுக்கு ஈரான் இணங்கும்வரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!