நாட்டில் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம் -முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 963 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பேலியகொடை கொரோனா கொத்தணியிடன் தொடர்புடைய 940 பேருக்கும் சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 15 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 8 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்து 174 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 155 ஆக காணப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 591 பேர் குணமடைந்த நிலையில் நேற்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 155 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் மேலும் 5 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு 13 ஐச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரும், வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவரும், அளுத்கமை பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும், வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 375 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வட மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் இரண்டு பேர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் ஆகியவற்றில் 776 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதனை முடிவுகளுக்கமைய, 21 பேரும் இவ்வாறு தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா பொது வர்த்தக சந்தையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வடைந்துள்ளது.

குறித்த பகுதியில் கடந்த 6 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட பி சி ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் நந்தன பத்திரகே தெரிவித்துள்ளார்

இதேவேளை கம்பஹா பொது வர்த்தக சந்தை மற்றும் அதனை அண்மித்த நிறுவனங்கள் உட்பட 5 இடங்களில் நேற்று பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதன்படி கொரோனா தொற்றுடன் அடையாளங் காணப்பட்ட நபர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இதுவரை 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய நாளில் குறித்த பகுதியில் 16 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரட்ன தெரிவித்துள்ளார்

இதன்படி 48 தொழிற்சாலைகளில் இருத்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இதனிடையே கம்பஹா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மேலும் 2 ஆயிரத்து 728 பி சி ஆர் பரிசோதனை முடிவுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் ம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!