வடக்கில் பஸ் நடத்துனர் உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா!

வடக்கில் நேற்று 7 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் கொழும்புத்துறை – கச்சேரி தனியார் பஸ் நடத்துநர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று 379 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 7 பேருக்குத் தொற்று உறுதியானது.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வலைப்பாடு மீன்வாடியில் தொழில் செய்யும் அவருக்கு, கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பஸ் நடத்துநரான இவருக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டதை அடுத்து, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

வவுனியா – செட்டிக்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண்ணாவார். இவர் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்தவர்.

மன்னாரில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்குக் கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!