பிஞ்சு குழந்தைக்காக ஒன்று திரண்ட தேசம்!

அரிதான மரபணு நோயினால் அவதிப்பட்டு வரும் 5 மாத குழந்தையான டீராவின் உயிர்காக்கும் மருந்தின் மீதான 6 கோடி ரூபாய் இறக்குமதி வரியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. மகாராஷ்ரா மாநிலம் மும்பை அந்தேரி பகுதியில் வசிக்கும் பிரியங்கா – மிஹிர் தம்பதியின் 5 மாத குழந்தை முதுகுத் தண்டுவட தசை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நோயை குணப்படுத்த ஸோல்ஜென்ஸ்மா என்ற ஒரேமுறையில் மரபணு மாற்று சிகிச்சைதான் செய்ய முடியும். இருப்பினும், ஜீன் தெரபிக்கு சுமார் ரூ.16 கோடி அளவில் செலவாகும். மேலும், இந்திய அரசின் இறக்குமதி வரி ரூ.6 கோடி சேர்த்து மொத்தம் ரூ.22 கோடி செலவாகும். இருந்தாலும், குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதால், கிராவுட் ஃபண்டிங் முறையில் நிதி திரட்டி, அந்த நிதியை கொண்டு அமெரிக்காவிலிருந்து 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை ஆர்டர் செய்துள்ளனர்.

இருப்பினும், 16 கோடிக்கு நிதி திரட்டி மருந்து வாங்கினாலும், அதனை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய மத்திய அரசிற்கு ரூ.6 கோடி ஜி.எஸ்.டி வரியாக செலுத்த வேண்டும். எனவே, ரூ.6 கோடி வரியை எப்படியாவது மத்திய அரசிடம் பேசி தள்ளுபடி செய்ய வைக்க வேண்டும் என தம்பதியினர் மகாராஷ்டிரா சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உதவியுடன் பிரதமர் மோடியை நாடியுள்ளனர். தங்களால் முடிந்த அளவிற்கு ரூ.6 கோடி ஜிஎஸ்டி வரியை மட்டும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேவேந்திர பட்னாவிஸ், பிரதமர் நரேந்திர மோடியுடனும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குழந்தை டீராவின் உயிர்காக்கும் மருந்தின் மீதான 6 கோடி ரூபாய் இறக்குமதி வரியை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரும், மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தையின் மருந்து இறக்குமதி மீதான வரியை தள்ளுபடி செய்தற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பட்னாவிஸ் கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து, குழந்தை உயிரை காப்பாற்ற ரூ.6 கோடி தள்ளுபடி செய்த மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினர் சமூகவலைத்தளங்களில் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!