கொரோனாவினால் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை தகனம் செய்ய வேண்டாம் – நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக கூறப்படும் நபர் ஒருவரின் சடலத்தை, மறு அறிவித்தல் வரை தகனம் செய்ய வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயதுன்னே கொரயா ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று இடம்பெற்ற போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர், களுபோவில வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டடிருந்த நிலையில், கடந்த 31 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த இளைஞர் கொரோனா தொற்று காரணமாகவே உயரிழந்துள்ளதாக, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இரண்டாவது PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும் வரை, சடலத்தை தகனம் செய்வதை தவிர்க்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, உயிரிழந்த நபரின் தந்தையினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக, களுபோவிலை வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இது தொடர்பில் எதிர்வரும் 17 ஆம் திகதி நீதிமன்றத்தில் உரிய வாதங்களை முன்வைக்குமாறும், அதுவரை சடலத்தை தகனம் செய்ய வேண்டாம் எனவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால், மனுவின் பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!