வீரவன்சவின் வீடு மீது குண்டுத் தாக்குதல் நடத்தப் போவதாக அச்சுறுத்தல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்க வேண்டுமென தெரிவித்ததை அடுத்து அமைச்சர் விமல் வீரவன்சவின் கொழும்பிலுள்ள இல்லம் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு கடந்த 12ஆம் திகதி மாலை 03 மணிக்கு அழைப்பு மேற்கொண்ட நபர் , வெள்ளவத்தை, ஜோசப் ஸ்டான்லி மாவத்தையிலுள்ள அமைச்சர் விமல் தங்கியிருக்கும் இல்லம் மீது தாக்குதல் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

உடனடியாக இது குறித்த விசாரணையை நடத்திய வெள்ளவத்தை பொலிஸார், சிம் அட்டை பதிவாகியுள்ளவரின் தகவலை பெற்றனர்.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுதர்சன் என்பவரது பெயரில் இந்த சிம் அட்டை இருப்பது தெரியவந்த போதிலும் குறித்த நபருடன் பொலிஸார் நடத்திய விசாரணையில் ஜனவரி 13ஆம் திகதி தனது கையடக்கத் தொலைபேசி தொலைந்து விட்டதாக பதிலளித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தி, தொலைபேசி தற்போது இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர். அந்த இடம், ஹட்டன் – கொட்டகலை, திம்புள்ளபத்த என்ற முகவரியை காட்டியுள்ளது. 119 அவசர இலக்கத்திற்கு வந்த எண்ணை மீள அழைத்தபோது தகாத முறையில் சந்தேக நபர் பேசியதாகவும் கூறப்படுகின்றது.

இதுசம்பந்தமான விசாரணைகள் துரிதமாக இடம்பெற்று வருவதோடு அமைச்சர் விமலுக்கு வெள்ளவத்தையில் மேற்படி முகவரியில் வீடொன்று இல்லை என்பதுவும் தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!