சீனக்குடா எண்ணெய் தாங்கி – கூட்டு முயற்சியை வலியுறுத்தும் இந்தியா!

இலங்கை – இந்திய கூட்டு ஒத்துழைப்புகளின் முக்கிய மற்றும் முன்னுரிமை மிக்க பரிமாணங்களில் ஒன்றாக எரிசக்தி ஒத்துழைப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தீவுப்பகுதிகளின் எரிசக்தி பாதுகாப்பிற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்ற உறுதிப்பூண்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளின் வளர்ச்சி மற்றும் செயற்பாட்டிற்கான பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் இரு தரப்பு ஒத்துழைப்புடன் ஊக்குவிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் இரு தரப்பு கூட்டு உற்பத்தி உறுதிப்பாட்டை தொடர்வதற்கு எதிர்பார்ப்பதாக இந்திய மேலும் தெரிவித்துள்ளது.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை மீண்டும் இலங்கை வசமாக்குவது குறித்து கடந்த 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்திய உயர்ஸ்தாணிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கை தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாகவும் அதனடிப்படையில் 2017 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு முயற்சிக்கான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை அறிவித்துள்ளது.

2003 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வழங்கப்பட்ட இந்த எண்ணெய் தாங்கிகளை மீளப்பெற்றுக் கொள்வதில் இலங்கை நீண்ட காலமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்த போதிலும் இந்தியா கூட்டு முயற்சியிலான திட்டங்களையே வலியுறுத்தி இருந்தது. இதனையே தற்போதும் வலியுறுத்தியுள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

மறுபுறம் வடக்கில் நெடுந்தீவு , அனலைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய மூன்று தீவுகளை உள்ளடக்கி புதுப்பிக்கத்தக்க இரட்டை ரக சக்தி திட்டம் சீனாவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை அண்மையில் அறிவித்திருந்தது.

அதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசாங்கம் உறுதியாகவே சீனாவுடன் குறித்த திட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்திருந்த நிலையிலேயே திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் விவகாரம் மற்றும் தீவுப்பகுதிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு குறித்து இரு தரப்பும் நிலைப்பாடுகளை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!