தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று – 77 ஆயிரத்தை அண்மித்தது..!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 369 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 797 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், பதுளை நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளர் உள்ளிட்ட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளுக்கமைய இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தொற்றுக்குள்ளான இருவரையும் பண்டாரவளை – கஹகொல்லையில் உள்ள சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பிவைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடைய 60 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதுளை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பண்டாரவளையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 300 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்த நிலையில், அவருடன் தொடர்புடைய ஏனையவர்களுக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 747 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 968 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!