க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்த அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான சுகாதார நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

பொது நடவடிக்கைகள் மற்றும் வேலைத்தள செயற்பாடுகள் ஆகியவற்றுக்கான வழிகாட்டல்களுக்கு மேலதிகமாக இந்த நடைமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

பரீட்சைகள் முகாமைத்துவ பிரிவு மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பரீட்சார்த்திகள் ஆகியோருக்காக இந்த சுகாதார நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் இரண்டு பொதுவான நடைமுறைகள் தேசிய ரீதியில் பின்பற்றப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்துவிதமான அவசர நிலைமைகளையும் கையாளும் வகையிலான 24 மணி நேர தேசிய ஒருங்கிணைப்பு நிலையத்தை நிறுவுதல் மற்றும் பரீட்சார்த்திகளுடன் தொடர்புடைய பாடசாலைகளின் நடவடிக்கைகளை பரீட்சைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக நிறைவு செய்தல் ஆகிய நடைமுறைகளே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர், தாம் தனிமைப்படுத்தப்பட்ட வீடு அல்லது பிரதேசத்தில் இருந்து வரவில்லை என்பதை உறுதிப்படுத்தும் படிவத்தை சமர்ப்பிப்பது அவசியமாகும்.

மேலும், பரீட்சார்த்தி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், அவர் கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதுடன், குறித்த பரீட்சார்த்தி தொடர்ந்து பரீட்சைக்கு தோற்றுவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கு, வைத்தியசாலையிலேயே பரீட்சைக்கு தோற்ற அனுமதி வழங்கப்படுவதுடன், தேவைப்படும் பட்சத்தில் சுகாதார ஊழியர்களை மேற்பார்வையாளர்களாக நியமிக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பரீட்சை நிலையத்துக்கு வருகை தந்த பின்னர் பரீட்சார்த்தி ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால், பரீட்சை நிலையத்தில் உருவாக்கப்படும் தனிமைப்படுத்தல் அறையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட நாளில் பரீட்சையை தொடர அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் உள்ள பரீட்சார்த்திகளுக்கு தனியானதொரு பரீட்சை நிலையம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும், பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அருகிலுள்ள பரீட்சை நிலையத்தில் தனியான கட்டடத்தில் புதிய பரீட்சை நிலையத்தை உருவாக்குமாறும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வாறான மாணவர்கள் தமது பரீட்சை அனுமதிப்பத்திரத்தை போக்குவரத்து அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும் எனவும், சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஏனைய சுகாதார நடைமுறைகள் அனைத்தும் உரிய முறையில் பின்பற்றப்படுவது அவசியம் எனவும், சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்து 513 பரீட்சை நிலையங்களில் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 352 பரீட்சார்த்திகள், 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இவர்களில் 1 இலட்சத்து 98 ஆயிரத்து 606 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும், 4 இலட்சத்து 23 ஆயிரத்து 746 பாடசாலை பரீட்சார்த்திகளும் உள்ளடங்குவதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியில் 542 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக நிறுவப்பட்டுள்ளன.

அத்துடன், மார்ச் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ளதாகவும், பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின், அது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சை ஏற்பாட்டுப் பிரிவை தொடர்புகொண்டு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!