ஆள் கடத்தல் வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேடியர்!

இலங்கையர்களை அமெரிக்காவுக்கு கடத்திய கனேடிய குடிமகன் ஒருவர், தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். மோகன், ரிச்சி என்ற பெயர்களால் அழைக்கப்படும் ஸ்ரீ கஜமுகம் செல்லையா (55) என்ற கனேடியர், அமெரிக்காவுக்குள் சுமார் 1,700 பேரை கடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 154 புலம்பெயர்ந்தோருடன் படகு ஒன்றில் அமெரிக்காவுக்கு செல்ல முயன்றபோது செல்லையா Turks and Caicos நாட்டு அதிகாரிகளிடம் சிக்கினார். ஓராண்டு அங்கு சிறைவாசம் அனுபவித்தபின்பு, 2020ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 17ஆம் திகதி அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

முதலில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துவந்த செல்லையா, நேற்று சுய லாபத்துக்காக வெளிநாட்டவர்களை அமெரிக்காவுக்கு கடத்தியதாக ஒப்புக்கொண்டார்.

இலங்கையிலிருந்து, துபாய், துபாயிலிருந்து மாஸ்கோ, மாஸ்கோவிலிருந்து கியூபா, கியூபாவிலிருந்து ஹெய்தி, ஹெய்தியிலிருந்து Turks and Caicos தீவுகள், அங்கிருந்து பஹாமாஸ், அங்கிருந்து மியாமி என நீண்ட பயணத்திட்டத்துடன் புலம்பெயர்ந்தோர் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இறுதியாக அவர்களை கனடாவில் கொண்டு சேர்ப்பது செல்லையாவின் திட்டம் என பெடரல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அட்டர்னி ஜெனரலான Nicholas L. McQuaid வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், செல்லையா சுய லாபத்துக்காக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!