நைஜீரியாவில் கடத்தப்பட்ட 300 பள்ளி மாணவிகள்: அதிரவைக்கும் காரணம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பதோடு, பள்ளி மாணவ-மாணவிகளை கடத்திச் சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற கிராமத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது.

இங்கு நூற்றுக்கணக்கான மாணவிகள் படித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை இந்த பள்ளியில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் வகுப்பறைகளுக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் மாணவிகளை சிறைபிடித்தனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. ஆசிரியர்களும் மாணவிகள் சிலரும் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பி அங்கு உள்ள வனப்பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டனர். இதனையடுத்து பயங்கரவாதிகள் லாரிகளை வரவழைத்து அதில் மாணவிகளை ஏற்றி கடத்திச்சென்றனர். 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கடத்தி செல்லப்பட்டதாக பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.‌ இதையடுத்து ஜங்கேபே கிராமத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு கடத்தி செல்லப்பட்ட மாணவிகளை மீட்பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நைஜீரியாவின் காட்சினா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றதும் பின்னர் அவர்களை பாதுகாப்பு படையினர் மீட்டதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!