உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இறுதி அறிக்கையை ஆராயும் குழுவின் பரிந்துரைகள் விரைவாக கிடைக்கும்: பிரசன்ன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குவின் இறுதி அறிக்கையை ஆராயும் விசேட குழுவின் பரிந்துரைகள் விரைவாக கிடைக்குமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விசேட குழுவானது மார் மாதம் 15 ஆம் திகதிக்குள் தமது பரிந்துரைகளை வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்க்பட்ட ஆணைக்குழு தற்போதைய ஜனாதிபதியினால் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால், அது கோட்டாபய ராஜபக்ஸவினால் அரசியல் காரணங்களுக்காக செய்யப்பட்டதாக விமர்சிக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகையினாலேயே ஆணைக்குழுவில் மாற்றங்களை ஏற்படுத்தாது, அதன் அறிக்கையை ஆராய விசேட குழுவினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நியமித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை அனைத்து மதத்தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய நீதியை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பெற்றுக்கொடுப்பார்கள் என தான் நம்புவதாக அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தப்படுவதற்காக பாதுகாப்புதுறையை விலக்கி கொடுத்ததுடன், அப்பாவி மக்கள் உயிரிழக்கும் போது மறைந்திருந்த தலைவர்களை கொண்ட அரசாங்கமே அப்போது காணப்பட்டதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

ஆகவே, எந்தவித விமர்சனங்கள் வந்தாலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அதற்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க தயாராக உள்ளதாகவும் அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!