கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் வெளியானது

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை, இந்தியாவின் அதானி நிறுவனம், ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை, இதியா மற்றும் ஜப்பான் அரசாங்கங்களினால் பெயரிடப்பட்டுள்ள தரப்புகள் இலங்கை துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைத்து அரச மற்றும் தனியார் திட்டமாக அபிவிருத்தி செய்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு கடந்த பெப்பிரவரி மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கலந்துரையாடலின் போது அங்கிகாரம் வழங்கப்பட்டது.

அத்துடன், இந்த விடயம் குறித்த ஒப்பந்தம் மற்றும் யோசனை விண்ணப்பங்கள் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஜப்பான் தூதரகத்திற்கு சமர்ப்பித்து முதலீட்டாளர்கள் குறித்துரைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதற்கமைய, குறித்த யோசனைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், ஜப்பான் அரசாங்கத்தினால் எந்தவொரு முதலீட்டாளர் குறித்தும் குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலே, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை, இந்தியாவின் அதானி நிறுவனம், ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து அரச மற்றும் தனியார் திட்டமாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!