கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள சிலர் அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளதாக குற்றச்சாட்டு

கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள, சில தரப்பினர் தமது செல்வாக்கினைப் பயன்படுத்தி அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளதாக, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

இதன்படி, இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதார தரப்பினருக்கு இடையூறுகளை விளைவிக்க வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள அழுத்தம் பிரயோகிக்கப்பட்ட சம்பவங்கள், பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், இவ்வாறான அழுத்தங்களை பிரயோகிப்பதின் ஊடாக, சுகாதார ஊழியர்களுக்கு தமது கடமையினை முறையாக மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் வரை பொறுமையாக செயற்படுமாறும், வேறு வழிகளில் அழுத்தங்களை வழங்க வேண்டாம் எனவும், வைத்தியர் ஹேமந்த ஹேரத் கேட்டுக் கொண்டுள்ளார்.

தடுப்பூசி வழங்குவற்கு தாம் உரிய திட்டங்களை வகுத்துள்ளதாகவும், அதனை மீறி செயற்பட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், அனைவருக்கும் தடுப்பூசியினை வழங்கி, அனைவரையும் பாதுகாப்பதே தமது நோக்கமாகும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!