கோவிட் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள மறுக்கும் விவசாயிகள்!

நாடு முழுவதும் 2-ம் கட்ட தடுப்பூசி பணிகள் நேற்று தொடங்கிய நிலையில், தலைநகர் டெல்லியில் 136 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்பட 196 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அங்கு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு நேற்று நண்பகல் 12 மணியில் இருந்து தடுப்பூசி போடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பல மையங்களில் காலையில் இருந்தே முதியவர்கள் வரத்தொடங்கினர்.

அங்கு நீண்ட நேரமாக அவர்கள் வரிசையில் காத்திருந்ததால், 12 மணிக்கு முன்னதாகவே தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இதனால் முதியவர்கள் மகிழ்ச்சியுடன் தடுப்பூசி போட்டு சென்றனர்.

இந்நிலையில், எல்லையில் போராடும் வயதான விவசாயிகள், தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மறுத்துள்ளனர். இதுகுறித்து, 80 வயதான பால்பிர் சிங் ராஜேவால் என்ற விவசாயி கூறியதாவது:

கொரோனா தடுப்பூசி, எனக்குத் தேவையில்லை. நாங்கள் கொரோனாவை கொன்றுவிட்டோம். விளைநிலங்களில் கடுமையாக உழைப்பதால், வைரசை எதிர்கொள்ளும் சக்தி எங்களிடம் உள்ளது. எனவே, கொரோனாவுக்கு, நாங்கள் பயப்பட மாட்டோம் என்றார்.

குல்வந்த் சிங் சந்து, 70, என்ற விவசாயி கூறுகையில், டெல்லி எல்லைகளில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எனினும், இதில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை,” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!