தவறாக மொழிபெயர்த்த எச்.ராஜா: பொறுமையை இழந்த அமித்ஷா!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்ளூர் கட்சிகள் முதல், தேசிய கட்சிகள் வரை அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தேசிய கட்சி தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது, அவர்களின் பேச்சை தமிழக தலைவர்கள் மொழி பெயர்ப்பு செய்வது வழக்கம். இதில் ஒரு சில முறை தவறாக மொழி பெயர்ப்பதும் நடந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று தமிழகத்தின் விழுப்புரத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இதில் அமித்ஷாவின் பேச்சை பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா மொழிபெயர்ப்பு செய்தார்.

அப்போது அமித்ஷா` `2ஜி, 3ஜி, 4ஜி ஆகியவை தமிழகத்தில் உள்ளன. இதில் 2ஜி என்றால் மாறன் குடும்பத்தின் இரண்டு தலைமுறைகள், 3-ஜி என்றால் கருணாநிதி குடும்பத்தின் மூன்று தலைமுறைகள், 4ஜி என்றால் காந்தி குடும்பத்தின் நான்கு தலைமுறைகள்.’ என்று வாரிசு அரசியலைப்பற்றி அமித்ஷா இந்தியில் விமர்சனம் செய்தார்.

இதனை தமிழில் மொழி பெயர்த்த, எச்.ராஜா, 2ஜி என்றால் மாறன் குடும்பத்தில் டெலிவிஷன் சேனல், 3ஜி கருணாநிதி குடும்பத்தின் டெலிவிஷன் சேனல், இதில் 4ஜி சோனியாக காந்தி குடும்பத்தினருடைது என்று கூறினார். ஆனால் தவறாக மொழிபெயர்ப்பதை அறிந்த அமித்ஷா, எச்.ராஜாவின் தவறை சுட்டிக்காட்டினார். ஆனாலும் இதனை கண்டுகொள்ளாத அவர் மீண்டும் அவர் தவறாகவே மொழி பெயர்த்தார்.

இதனையடுத்து, அமித்ஷா, நீங்கள் மீண்டும் தவறாக மொழி பெயர்க்கிறீர்கள். இதை நானே சொல்லிக் கொள்கிறேன் எனறு கூறியுள்ளார். இதனால் பிரச்சார கூட்டத்தில் சிரிப்பலைகள் எழுந்தது. ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு தமிழகம் வந்த அமித் ஷா, சொட்டு நீர் பாசனத் திட்டங்கள் குறித்து பேசும்போது அதனை மொழிபெயர்த்த, எச்.ராஜா, `சிறுநீர் பாசனம்` என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது ஒருபுறம் இருக்க மறுமுனையில், காங்கிரஸ் கட்சியிலும் மொழிபெயர்ப்பு பரிதாபங்கள் இருக்கிறது. இதில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்திருந்த ராகுல் காந்தியின் பிரச்சாரத்தை மொழிபெயர்த்த, முன்னாள் அமைச்சர் தங்க பாலு தவறாக மொழிபெயர்த்த நிலையில், கடந்த வாரம் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தியின் பேச்சை, முன்னாள் புதுவை நாராயணசாமி மொழிபெயர்த்தார். அப்போது மீனவ கிராமத்தை சேர்ந்த பெண்மனி ஒருவர், நிவர் புயல் காலத்தில் எங்களுக்கு உதவ யாருமே இல்லை. முதல்வர் கூட எங்களை கண்டுகொள்ளவில்லை என்று குறிபிட்டார்.

இதனை மொழிபெயர்த்த நாராயணசாமி, ` நிவர் புயலின் போது நான் வந்து பார்த்தேன் என்று அவர் கூறுகிறார்’ என மொழிபெயர்த்தார். அதனைத் தொடர்ந்து அந்த பெண்மணியின் உணர்ச்சிவசமான பேச்சை கேட்ட ராகுல்காந்தி, நாராயணசாமி தவறாகவே மொழிபெயர்க்கிறார் என்பதை புரிந்துகொண்டார். இந்த வீடியோ இப்போதும் வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!