அப்போது கேட்காத தமிழ்த் தரப்பினர் இப்போது கேட்கின்றனர்!

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்காக முன்னைய அரசாங்கத்திற்கு ஆதரவை வெளியிட்ட தமிழ் தரப்பினர், தற்போதைய அரசாங்கம் ஏன் மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லை என கேள்வி எழுப்புகின்றனர் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாதிவெலவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், மாகாண சபை தேர்தல் தொடர்பில் தமிழ் தலைமைகள் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக கூறியுள்ளார்.

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்காக முன்னைய அரசாங்கத்திற்கு ஆதரவை வெளியிட்ட தமிழ் தரப்பினர், தற்போது ஜெனிவாவில் சென்று அரசாங்கம் ஏன் மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லை என கேள்வி எழுப்புகின்றனர்.

அப்போது எதிர்க்கட்சியில் இருந்த நாங்கள் மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பதை எதிர்த்தோம். அப்போதைய அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கத் திட்டமிட்டிருந்தபோது வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் அப்போதைய அரசாங்கத்துடன் கைகோர்த்து அதற்கு ஆதரவாக செயற்பட்டனர்.

மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென இப்போது கூச்சலிடுகிறார்கள். நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது இந்த நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடினோம். இன்றும் ஒரு அரசாங்கமாக நாம் அவ்வாறு செய்கிறோம். 2019இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஜனநாயக ரீதியாக ஒரு புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

கொரோனா தொற்றுநோயால் உலகம் இப்போது பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அந்த நிலைமை நம் நாட்டிற்கும் பொதுவானது.

ஆனால் அந்த சவால்கள் அனைத்தையும் எதிர்கொள்வதற்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் ஒரு வளமான நாட்டை உருவாக்குவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மக்களுக்கு குடிநீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகளைக் கூட வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்தகைய அரசாங்க நடவடிக்கைகளிலிருந்து அதிகபட்ச நன்மைகளை வழங்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!