இரணைதீவில் அடக்கம் செய்வது தற்காலிகமானது தானாம்!

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களது சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

மாகாண சபைகளின் பொதுச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண மற்றும் பிரதேச சுகாதார பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் அடங்கிய குழு இந்த விடயம் குறித்து ஆராய்வதாக குறிப்பிட்டார்.

அவர்கள் அந்தந்த மாகாணங்களிலிருந்து கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களது சடலங்களை அடக்கம் செய்யப் பொருத்தமான இடத்தை தீர்மானிக்கும் வரை இந்த முடிவு தற்காலிகமாக இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

மேலும் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்கள் இறுதி செய்யப்பட்டு, அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடக்கம் செய்வதற்கான அனைத்து செலவுகளும் அரசாங்கத்தால் ஏற்கப்படும் என்றும் சடலங்கள் கொழும்பு மற்றும் வெலிகந்த மருத்துவமனை போன்ற இரு இடங்களிலிருந்து தீவுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார்.

கொரோனாவால் உயிரிழந்த ஒருவருக்கு இரண்டு உறவினர்கள் இறுதி சடங்குகளுக்கு தீவுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இறுதி சடங்குகள் சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி அல்லது பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!