ஸ்வீடன் சாலையில் இளைஞர் வெறிச்செயல்: ரத்த காயங்களுடன் சிதறி ஓடிய மக்கள்!

ஸ்வீடனில் பரபரப்பான பிரதான சாலையில் கத்தியுடன் போவோர் வருவோரை கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞரை பொலிசார் சுட்டுப் பிடித்துள்ளனர். இளைஞரின் கண்மூடித்தனமாக இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்வீடனின் வெட்லாண்டா பகுதியிலேயே குறித்த கொலைவெறி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், 20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டு பின்னர் கைது செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது ஒரு பயங்கரவாத தாக்குதலாகவே பொலிசார் கருதுகின்றன்றனர். இருப்பினும் மேலதிக தலவல்களை வெளியிட பொலிஸ் தரப்பு மறுத்துள்ளது.

குறித்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் சிலரது நிலை கவலைக்கிடம் எனவும் தெரிய வந்துள்ளது.

ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் எவரும் உள்ளார்களா என்பது தொடர்பில் இதுவரை தகவல் இல்லை.

இதனிடையே, தாக்குதல் நடத்தியவர் அதிகாரிகளுக்குத் தெரிந்தவர் எனவும், ஆனால் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எந்த வகை என்பதையும் தாக்குதலின் நோக்கம் எது என்பதையும் உறுதிப்படுத்த பொலிசார் மறுத்துள்ளனர்.

தாக்குதல்தாரியின் காலில் துப்பாக்கியால் சுட்ட பின்னர், அவரை நெருங்கிய பொலிசார், பாதிக்கப்பட்டவர்களுடன், அந்த இளைஞரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மாலை 3 மணியளவிலேயே குறித்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. காயங்களுடன் பொதுமக்கள் சிதறி ஓடுவதை நேரில் பார்த்த சிலர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் Stefan Löfven,

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!