சிறிலங்கா விடயத்தில் ஐ.நா தனது கடந்தகால தவறை சரிசெய்ய ஓர் வாய்ப்பு !

உலகெங்கும் போரினாலும், இனப்படுகொலைகளினாலும் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியினை பெற்றுக் கொள்வதில், ஐ.நாவின் தேவை தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதன் மூலம், தனது கடந்த கால தவறுகளை சரிசெய்வதற்கு ஐ.நாவுக்கு தற்போது ஓர் வாய்ப்பு கிட்டியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஐ.நா மனித உரிமைச்சபை தனது தலைமைத்துவத்துக்கும், முன்னேற்றத்துக்கும் வாய்ப்பாக இது அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு தொடர்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஐ.நா அங்கத்துவ நாடுகளுக்கு அனைத்துலக தொடர்பாடலுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் காணொளி வாயிலாக முன்வைத்திருந்தார்.

அவர் தனதுரையில், கடந்த 12 ஆண்டுகளாக நாங்கள் இன்னமும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காகக் காத்திருக்கிறோம்.

ஐ.நா. தீர்மானங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து இணங்காதது, மற்றும் போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உட்பட இடைக்கால நீதி வழிமுறைகளை நிறுவுவதில் தாமதம் என்பன போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை மற்றும் நீதியை வழங்குவதைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாகும்.

எந்தவொரு தீர்மானத்தையும் நடைமுறைப்படுத்தி நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான சூழலை உருவாக்கும் நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை உள்நாட்டு பொறிமுறை மூலம் செய்யமுடியாது என்பதை சிறீலங்கா மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்ததன் மூலம் தெளிவாகிவிட்டது.

உங்களது தற்போதைய தீர்மான வரைவு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் துன்பத்திற்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்குவதோடு, சிறிலங்கா இனவாத அரசுக்கும் அதன் குற்றவாளிகளுக்கும் மேலதிக நேரமும் வெகுமதியும் அளிப்பதாக அமைகிறது.

உலகெங்கும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதால் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐ.நா மனித உரிமைப்பேரவையின் தேவை இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதின் மூலம், தனது தலைமைத்துவத்தைக் காண்பிப்பதற்கும், கடந்த கால தவறுகளை சரிசெய்வதற்கும், முன்னேறுவதற்கும் ஐ.நா மனித உரிமைப்பேரவைக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என உறுதிபடத் தெரிவிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!