மம்தா பானர்ஜி மீது தாக்குதல்: வங்காள மக்களின் சக்தியை காண தயாராகுங்கள் – அபிஷேக் பானர்ஜி எச்சரிக்கை!

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். சுவேந்துக்கு பதிலடி தரும் வகையில் அவர் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.

இதற்காக நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை மம்தா பானர்ஜி நேற்று தாக்கல் செய்தார். ஹல்டியா பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று அவர் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து மாலையில் பர்பா மெதினிபுர் மாவட்டத்தின் ரியாபாரா பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள வந்தார். அங்குள்ள கோயிலுக்கு வெளியே காரின் அருகே மம்தா நின்றிருந்த போது, அவரை 4, 5 பேர் தாக்கியதாக மம்தா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். இதில் காலில் காயமடைந்த மம்தாவை பாதுகாவலர்கள் தூக்கிக் கொண்டு காரில் ஏற்றினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘‘கார் கதவு அருகே நான் நின்றிருந்தேன்.

அப்போது, 4, 5 பேர் என்னை தள்ளிவிட்டு தாக்கினர். என்னை சூழ்ந்து கொண்டு கார் கதவு நோக்கி தள்ளிவிட்டனர். கதவில் எனது கால் மோதியது. இதில் காலில் காயம் ஏற்பட்டது,’’ என்றார். தற்போது கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் மம்தா பானர்ஜி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், “ஆரம்ப பரிசோதனையில் அவரது(மம்தா பானர்ஜி) இடது கணுக்கால், கால் மற்றும் காயங்கள், வலது தோள்பட்டை, முன்கை மற்றும் கழுத்தில் ஏற்பட்ட கடுமையான எலும்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் மார்பு வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அவர் 48 மணி நேரம் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மே-2ம் தேதி வங்காள மக்களின் சக்தியை காண தயாராகுங்கள் என்று பாஜகவை அபிஷேக் பானர்ஜி எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “மே 2ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை வங்காள மக்களின் சக்தியை காண உங்களை நீங்களே (பாஜக) தயார்படுத்திக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!