ஸ்கொட்லாந்தில் தடுப்பூசி பெற வராத பெண்: நேரில் சென்ற சுகாதார ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஸ்கொட்லாந்தில் கொரோனா தடுப்பூசி பெற அழைப்பு விடுக்கப்பட்ட பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் 12 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை பொலிசார் வெளிப்படுத்தியுள்ளனர். ஸ்கொட்லாந்தின் அபெர்தீன் பகுதியை சேர்ந்தவர் 80 வயது கடந்த கிறிஸ்டினா மாலி. இவருக்கு உள்ளூர் சுகாதார மையம் சார்பாக பிப்ரவரி 25ம் திகதி கொரோனா தடுப்பூசிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் குறிப்பிட்ட நாளில் இவர் தடுப்பூசி பெற சுகாதார மையம் செல்லாத நிலையில், சுகாதார ஊழியர்கள் இவரது குடியிருப்புக்கு நேரடியாக சென்றுள்ளனர்.

அங்கே அவர்கள் கண்ட காட்சி, சுகாதார ஊழியர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்த, அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

குறித்த குடியிருப்பில் கிறிஸ்டினா மாலி இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் எப்போது, எப்படி இறந்தார் என்பதைத் தீர்மானிக்க அதிகாரிகள் இன்னும் முயற்சித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கிறிஸ்டினா மாலி சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என பொலிசார் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் தடயவியல் அதிகாரிகள் தற்போது அவரது வீட்டிற்குள் விரிவான சோதனையில் ஈடுபட்டுள்ளதுடன், அவரது மரணம் குறித்து மேலும் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!